கோலாலம்பூர்: அல் ஜசீரா ஆவணப்படத்தில் தோன்றிய முகமட் ரெய்ஹான் கபீர் என அழைக்கப்படும் வங்காளதேச ஆடவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, மலேசியாவிற்குள் நுழைய முடியாதவர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்.
குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ கைருல் சைமி டாவுட் இது குறித்து தெரிவித்தார்.
“இந்த வெற்றி இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியான உளவு பார்த்தல் மற்றும் தேடலின் விளைவாகும்.
“சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மாலை 5.45 மணியளவில் புத்ராஜெயா குடிநுழைவுத் துறையின் செயல்பாட்டு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள் குழு ரெய்ஹானை செதாபாக்கில் தடுத்து வைத்ததாக அவர் கூறினார்.
முகமட் ராய்ஹான் கபிர் எனும் அந்நபர், ‘லோக்ட் அப் இன் மலேசியாஸ் லோக்டவுன்’ எனும் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் புலம்பெயர்ந்தோர் மலேசியாவில் கொடுமைப் படுத்தப்படுகின்றனர் என்று பேட்டிக் கொடுத்ததை அடுத்து மலேசிய குடிநுழைவுத் துறை அவரை தேடும் நடவடிக்கையில் இறங்கியது.
மாலை 6 மணிக்கு, 25 வயதான ராய்ஹான் குடிநுழைவுத் துறையால் கைது செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக முன்னதாக நேற்று, புக்கிட் அமான் காவல் துறை துணை இயக்குநர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்திருந்தார்.
குடிநுழைவுத் துறை 1959/63 குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சிஹான் லெகஸி செண்டெரியான் பெர்ஹாட் பி -7-9, மெனாரா உன்காங் இமாஸ், ஜாலான் லோக் யூ, கோலாலம்பூரில் அவரை கண்டுபிடிப்பதற்கு குடிநுழைவுத் துறை பொது மக்களின் உதவியை நாடியிருந்தது.
அல் ஜசீரா ஆவணப்படத்தில் பேட்டி கண்டபோது, கொவிட் 19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை மலேசியா மோசமாக நடத்துகிறது என்று ராய்ஹான் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக செய்தி தகவல்கள் தெரிவித்தன.
ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்காக அல் ஜசீரா மீது காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.