Home One Line P1 ஆறு மாத வங்கிக் கடன் தள்ளுபடி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்!

ஆறு மாத வங்கிக் கடன் தள்ளுபடி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்!

516
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வங்கிக் கடன்கள் தொடர்பாக தற்போதுள்ள ஆறு மாத கால தள்ளுபடி அவகாசம் தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜாப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

“தேசிய வங்கி மற்றும் வங்கித் துறையுடனான கலந்துரையாடல்களில், அவர்கள் (வங்கிகள்) இந்நேரத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கும், வணிகங்களுக்கும் தொடர்ந்து உதவுவதில் உறுதியளித்துள்ளனர்.

திங்களன்று (ஜூலை 27) மக்களவையில் லிம் குவான் எங் எழுப்பிய துணை கேள்விக்கு பதிலளித்தபோது, “விரைவில் ஒரு முடிவு அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஏப்ரல் 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஆறு மாத கால தள்ளுபடி காலத்தில் 93 விழுக்காட்டு அல்லது 7.7 மில்லியன் தனிநபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 245,000- க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அல்லது 95 விழுக்காடினரும் பயனடைந்துள்ளதாக அவர் கூறினார்.

தள்ளுபடி காலத்தை அமல்படுத்தியதிலிருந்து வங்கிகள் மொத்தம் 6.4 பில்லயன் ரிங்கிட்டை இழந்துவிட்டன என்று அவர் கூறினார். இது 79 பில்லியன் ரிங்கிட் மொத்த புதிய கடன்களை வழங்குவதில் அவர்களின் திறனை பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட்19- இன் தாக்கத்தால் மக்கள் மற்றும் வணிகங்கள் எதிர்கொள்ளும் பணப்புழக்க சவால்களை கருத்தில் கொண்டு மலேசியா தானியங்கி கடன் தள்ளுபடியை அமல்படுத்திய முதல் நாடு என்று அவர் குறிப்பிட்டார்.

சில வணிகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால் கடன்களைத் திரும்பச் செலுத்தி வருகின்றனர்.

தனிநபர்களும் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கி உள்ளனர். சில துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலையை இழந்தவர்கள் இருப்பதை தெங்கு ஜாப்ருல் ஒப்புக் கொண்டார்.

“இந்த குழுக்களுக்கு, வங்கிகளால் உதவிகள் வழங்கப்படுமா என்பது ஆராயப்படுகிறது. அவர்கள் கடன் வாங்கியவர்களைத் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்ற ஊகத்திற்கு மத்தியில் அரசாங்கம் இதனை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெங்கு ஜாப்ருல் கூறினார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட வேண்டுமானால், முன்னர் செய்யப்பட்டதைப் போலவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.