கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள அல் ஜசீரா அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.
கொவிட்19 பாதிப்பின் போது சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள மலேசியா தவறாக நடத்தியது தொடர்பான ஆவணப்படத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக இது நடத்தப்பட்டதாக வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஜி டவரில், 27- வது மாடியில் உள்ள அனைத்துலக ஒளிபரப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் குறைந்தது இரண்டு சீருடை அணிந்த உறுப்பினர்களும், மாற்று உடையணிந்த ஐந்து பேரும் சோதனை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 நிமிடம் 50 விநாடிகள் நீடிக்கும் “லோக்ட் அப் இன் மலேசியாஸ் லோக்டவுன் ” ஆவணப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சில உபகரணங்களை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் ஜசீரா நிர்வாகம் இது குறித்து ஓர் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவை இழிவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து அல் ஜசீரா மீது காவல் துறை விசாரணையைத் தொடங்கியது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அதிகாரிகள் வெளிநாட்டினரைக் கொடுமைப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
அண்மையில், இது குறித்து பேசிய தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டது என்று சித்தரிக்கும் ஆவண அறிக்கைகள் பொய் என்று கூறியிருந்தார்.
அல் ஜசீரா செய்தி நிறுவனம் நெறிமுறையற்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்தக் கொள்கை அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் இனவெறியுடன் செயல்படுகிறோம் என்று குற்றம் சாட்டுவதும் உண்மையல்ல. தடுத்து வைத்தது சட்டபூர்வமானது. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்ய மலேசியாவின் குடிநுழைவுத் துறை சட்டத்தைப் பயன்படுத்துகிறது.” என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், இந்த ஆவணப்படம் தொடர்பாக விளக்கமளிக்க ஆறு அல் ஜசீரா ஊழியர்கள் காவல் துறையால் அழைக்கப்பட்டிருந்தனர்.
25 பேர் 25 நிமிட ஆவணப்படம் தயாரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அல்ஜசீரா நிர்வாகம் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை தற்காத்து, ஆவணப்படத்திற்கு எதிர்வினையைத் தொடர்ந்து அதன் ஊழியர்கள் எதிர்கொள்ளும் இடையூறு குறித்து கவலை தெரிவித்திருந்தது.