Home One Line P2 “சீன நிறுவனப் பங்குகளை விற்று விடுங்கள்” – அமெரிக்கா எச்சரிக்கை

“சீன நிறுவனப் பங்குகளை விற்று விடுங்கள்” – அமெரிக்கா எச்சரிக்கை

578
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் சீன நிறுவனப் பங்குகளை விரைந்து விற்று விடுமாறு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் அறவாரியங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் அறவாரியங்கள் பொதுவாக நீண்ட கால முதலீடாக பங்குச் சந்தை நிறுவனங்களில் முதலீடு செய்வது வழக்கம். சீன நிறுவனங்கள் சில அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பின்னர் அவற்றின் விலைகள் பன்மடங்கு உயர்ந்தன.

இதனால் இத்தகைய அறவாரியங்களும் தங்களின் முதலீடுகளை சீன நிறுவனப் பங்குகளை வாங்குவதற்குப் பயன்படுத்தின.

#TamilSchoolmychoice

செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 18) அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சு கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. தங்களின் அறவாரிய முதலீடுகளில் சீனநிறுவனப் பங்குகள் இருந்தால் அவற்றை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக் கடிதம் அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்றிருக்கும் சீன நிறுவனங்களைத் தடை செய்வதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக மேற்கொள்ளும் வணிகப் போரின் ஒரு பகுதியாக இந்த அடுத்த கட்ட நடவடிக்கை அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு பொதுவாக பெரும் பணக்காரர்கள் கோடிக்கணக்கான டாலர்களை நன்கொடைகளாக வழங்குவார்கள்.

ஒரு சிலர் தங்களின் உயில்களிலும் கணிசமான தொகைகளை தாங்கள் படித்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பார்கள். இந்தப் பணம் கல்வி உதவிநிதி, ஆராய்ச்சிகள், நற்பணிகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும்.

இத்தகைய நன்கொடைகள் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் அறவாரிய நிதிகளில் பெரும்பாலும் சேர்க்கப்படும். மிகப் பெரிய தொகையாக இருந்தால் தனியாகவே அறவாரிய நிதிகள் ஏற்படுத்தப்படும்.

இத்தகைய அறவாரிய நிதிகளில் இருந்து பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் பங்குச் சந்தையில் குறிப்பாக சீன நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.

அண்மையில் கிடைக்கப் பெற்ற தரவுகளின்படி கல்லூரி அறவாரிய நிதிகளில் 13.9 விழுக்காடு வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.