கோலாலம்பூர்: சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிதி அமைச்சின் நேரடி குத்தகைகள் விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மீதும் நிதி அமைச்சராகத் தனது நிர்வாகம் மீதும் சுமத்தப்பட்ட புகார்களுக்கு முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று பதில் அளித்தார்.
நிதி அமைச்சர் தெங்கு சாப்ரோல் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 101 குத்தகைகளை நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் வழங்கியதாக தெங்கு சாப்ரோல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
அந்த குத்தகைகைகளின் மொத்த மதிப்பு 6.61 பில்லியன் ரிங்கிட் ஆகும்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுந்த அமளியில் புருவாஸ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ங்கே கூ ஹாம் அவையிலிருந்து அவைத் தலைவரால் வெளியேற்றப்பட்டார்.
தம்மீது வைக்கப்பட்ட புகார்களுக்கு இன்று பதிலளித்த லிம் குவான் எங் அந்தக் குத்தகைகளில் 5.3 விழுக்காடு மட்டுமே தனது நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்டது என்றும் எஞ்சியவை அனைத்தும் தேசிய முன்னணி ஆட்சியின்போது வழங்கப்பட்டவை என்றும் விளக்கியிருக்கிறார்.
மொத்தம் வழங்கப்பட்ட குத்தகைகளில் 0.07 விழுக்காடு மட்டுமே தனது 22 மாத ஆட்சி காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வழங்கியது என்றும் அவர் மேலும் கூறினார். அது கூட அத்தியாவசியமான, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வழங்கப்பட்டவை எனவும் லிம் தெரிவித்தார்.
6.61 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய குத்தகைகளில் பெரும்பான்மையானவை தேசிய முன்னணி ஆட்சி காலத்தின்போது வழங்கப்பட்ட திட்டங்களை தொடர்வதற்காக வழங்கப்பட்ட குத்தகைகளாகும். இவற்றில் 67.7 விழுக்காடு தேசிய முன்னணி திட்டங்களைத் தொடர்வதற்காகவும், நிறைவு செய்வதற்காகவும் வழங்கப்பட்டது.
26.5 விழுக்காடு குத்தகைகள் பொருட்களின் விநியோகத்திற்கும் சேவைகளுக்காகவும் வழங்கப்பட்டவையாகும். இந்த குத்தகைகளும் தேசிய முன்னணி நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட குத்தகைத் திட்டங்களின் தொடர்ச்சியாக வழங்கப்பட்டவையாகும்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய போது குவான் எங் இந்த விவரங்களை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து லிம் குவான் எங் மீது புகார் கூற, விரிக்கப்பட்ட வலையில் நிதியமைச்சர் தானே விழுந்து விட்டார் என்றும் தேசிய முன்னணியின் குறைகளை அவரே சுட்டிக்காட்டி விட்டார் என்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.