Home One Line P2 நாடாளுமன்ற உறுப்பினர்-தொழிலதிபர் வசந்தகுமார் காலமானார்

நாடாளுமன்ற உறுப்பினர்-தொழிலதிபர் வசந்தகுமார் காலமானார்

1597
0
SHARE
Ad

சென்னை : காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் கொவிட்-19 தொற்று காரணமாக இன்று மாலை சென்னையில் காலமானார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை நிருவாகம் இன்று இதற்கு முன்னதாக அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

70 வயதான வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக பாரம்பரியமாக பணியாற்றி வந்தவர். பல பதவிகளை வகித்திருக்கிறார். தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் செயல் தலைவராகவும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வசந்தகுமார் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் முன்னணி வணிக நிறுவனமான வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளராகவும் வசந்தகுமார் திகழ்ந்தார். மின்சாரத் தளவாடப் பொருட்களை விற்பனை செய்யும் பல பேரங்காடிகளை இந்நிறுவனம் தமிழகம் எங்கும் கொண்டுள்ளது.

பழம்பெரும் காங்கிரஸ் தலைவரும் சிறந்த மேடைத்தமிழ் பேச்சாளருமான குமரி அனந்தனின் இளைய சகோதரர்தான் வசந்த குமார்.

வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சென்னை-28 படத்திலும் அதன் இரண்டாம் பாகத்திலும் விஜய் வசந்த் நடித்திருந்தார்.

கொவிட்-19 பாதிப்பு காலகட்டத்தில் வசந்தகுமார் தனது தொகுதியான கன்னியாகுமரி, சென்னை போன்ற இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

இதன் மூலம் அவருக்கு கொவிட்-19 தொற்று கண்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. நிமோனியா காய்ச்சலாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

வசந்தகுமாரின் அகால மரணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.