சென்னை : கடந்த சில மாதங்களாக கொவிட்-19 பிரச்சனைகளால் மங்கிக் கிடந்த தமிழக அரசியலில் விரைவில் நடைபெறவிருக்கும் கன்னியாகுமரி இடைத் தேர்தலால் மீண்டும் சுறுசுறுப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்னியாகுமரி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட வசந்தகுமார் (படம்) வெற்றி பெற்றார்.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக அவர் அப்போது பதவி வகித்தார். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வசந்தகுமார்.
அதைத் தொடர்ந்து நாங்குநேரியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
வசந்தகுமார் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கொரொனா தொடர்பான உடல்நலக் குறைவால் காலமானார். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதி காலியானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-திமுக கூட்டணி சார்பில் மீண்டும் இங்கு காங்கிரஸ் கட்சியே போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசந்தகுமார் குடும்பத்தில் இருந்து ஒருவர் இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நிறுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது குடும்பத்திற்கு இருக்கும் பணபலம், அகால மரணத்தால் ஏற்பட்டிருக்கும் அனுதாபம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம்.
வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் சென்னை-28 போன்ற சில படங்களில் நடித்து சினிமா பிரபலம் கொண்டவராகத் திகழ்கிறார். எனவே, அவரே வேட்பாளராக நிறுத்தப்படலாம்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி (படம்) கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்.
இதற்கிடையில் கன்னியாகுமரி தேர்தலில் பொன்.இராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2014 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்.இராதாகிருஷ்ணன்.
ஆனால் 2019 பொதுத் தேர்தலில் வசந்தகுமாரிடம் அவர் தோல்வியடைந்தார். எனவே அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மற்றொரு பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் கட்சித் தலைமை அனுமதித்தால் கன்னியாகுமரி இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் 2019 பொதுத் தேர்தல் உடன்பாட்டுக்கு ஏற்ப பாஜகவே மீண்டும் அங்கு போட்டியிட அதிமுக விட்டுத் தருமா அல்லது தாங்களாகவே நேரடியாக கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிடுவார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.