கோலாலம்பூர்: அமானா கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து ஹுசாம் மூசா விலகியதை அமானா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.
செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற அமானா உச்சமன்றக் குழுவின் மாதாந்திர கூட்டத்தில் அவரது பதவி விலகல் ஏற்கப்பட்டதாக அமானா தகவல் தொடர்பு இயக்குநர் காலிட் சமாட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“அவரது பதவி விலகலுக்கான விண்ணப்பம், கிளந்தானில், குறிப்பாக அவர் வழிநடத்தும் கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில், அமானாவுக்கான தொகுதிகளை வெல்வதில் கவனம் செலுத்த உதவுவதாகும்” என்று காலிட் கூறினார்.
இருப்பினும், ஹுசாமின் திறன்கள் தேசிய மட்டத்தில் இன்னும் தேவைப்படுவதால், மூன்று பணியகங்களின் ஆலோசகராக கண்காணிக்கவும், செயல்படவும் அவரைக் அமானா கேட்டுக் கொண்டுள்ளது.
“இது 15- வது பொதுத் தேர்தலுக்கான தயார் நிலையின் ஓர் அங்கம்
“தேர்தல் பணியகம், தகவல் தொடர்பு மற்றும் திட்டமிடல் போன்ற பணியகங்களில் அவர் செயல்படுவார்” என்று காலிட் கூறினார்.
கட்சித் தலைவர், முகமட் சாபு அல்லது வேறு எந்த அமானா தலைவரின் அதிருப்தி காரணமாக ஹுசாம் பதவி விலகினார் என்பதற்கான எந்தக் கருத்தும் ஆதாரமற்றது என்றும் காலிட் தெரிவித்தார்.
முன்னதாக, தமக்கும் முகமட் சாபுக்கு இடையில் கருத்து வேறுபாடு குறித்து ஹுசாம் மறுத்தார்.