Home One Line P2 ஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு

ஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு

993
0
SHARE
Ad
படம்: யோஷிஹிடே சுகா

தோக்கியோ: பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 16) நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று யோஷிஹிடே சுகா ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு தொழிற்சாலை ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கிய சுகா ஒரு விவசாயியின் மகனாவார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசான ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படிருக்கிறார். அவருக்கு வயது 71.

புதன்கிழமை நாடாளுமன்ற வாக்கெடுப்பில் சுகா 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். ஜப்பானிய நாடாளுமன்றத்தில் 465 வாக்குகளில் 314 வாக்குகளைப் பெற்ற சுகா, நாடாளுமன்ற மேலவையில் மொத்தமுள்ள 240 வாக்குகளில் 142 வாக்குகளைப் பெற்றார்.

#TamilSchoolmychoice

ஜப்பானின் ஆளும் கட்சி எல்டிபி (லிபரல் டெமோக்ரெடிக் பார்ட்டி) திங்களன்று (செப்டம்பர் 14) தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹிடே சுகாவை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது. பதவி விலகும் சின்சோ அபேவுக்கு பதிலாக நாட்டின் அடுத்த பிரதமராக அவரை நியமிப்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

திங்கட்கிழமையன்று நடைபெற்ற கட்சித் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளிடம் இருந்து மொத்தம் 534 வாக்குகளில் 377 வாக்குகளைப் பெற்ற சுகா, இரண்டு போட்டியாளர்களுக்கு எதிராக எளிதாக வென்றார்.

சுகா முறையாக தமது போட்டியை அறிவிப்பதற்கு முன்பே, 71 வயதான அவருக்கு ஆளும் கட்சிக்குள்ளேயே முக்கிய தரப்புகளின் ஆதரவு இருந்தது. அவரது நியமனம் வாயிலாக உறுதியளிக்கும் நிலைத்தன்மை, அபேயின் கொள்கைகள்  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.

ஆகஸ்ட் பிற்பகுதியில் தனது ஆட்சியில் மேலும் ஒரு வருடம் மீதமுள்ள நிலையில், அபே பதவி விலகும் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் நீண்ட காலமாக போராடி வந்த குடல் நோய்க் காரணத்தினால், அவரால் தொடர்ந்து பிரதமர் பதவியில் நிலைக்க இயலாது என்று அவர் கூறினார்.

சுகாவின் வெற்றியைத் தொடர்ந்து ஜப்பானில் பெரிய கொள்கை மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் அபேவின் முக்கிய கொள்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதே தனது பணி எனவும் சுகா கூறியுள்ளார்.

எனினும் புதிய பிரதமர் என்ற முறையில் சுகாவுக்கு பல்வேறு சிக்கல்கள், சவால்கள் காத்திருக்கின்றன.

கொவிட்19 தொற்றுநோய் காரணமாக நாடு ஏற்கனவே பொருளாதார ரீதியில் மந்தநிலையில் இருந்து வருகிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முதல் சவாலாக சுகாவுக்கு இருக்கும்.

அடுத்து, சீனாவுடனான நல்லுறவுகளைப் பேணுவது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிகப் போரினால் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை எதிர்கொள்வது போன்றவை அடுத்த கட்ட சவால்களாக இருக்கும்.

மற்ற நாடுகளுடன், பொருளாதார, அரசியல் உறவுகளை மேம்படுத்துவதும் சுகாவின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாக இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் பிரிட்டன் முதல் நாடாக ஜப்பானுடன் புதிய வணிக ஒப்பந்தத்தை அண்மையில் செய்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.