ஷா ஆலாம்: இந்த மாத தொடக்கத்தில் ரவாங் சுங்கை கோங்கை மாசுபடுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு சகோதரர்கள் உட்பட ஐந்து பேருக்கு தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதித்துறை ஆணையர் நோர்ஷரிடா அவாங், யிப் கோக் வெய்,52, யிப் கோக் முன், 58, யிப் கோக் குயின், 50, யிப் கோக் வெங், 60, மற்றும் தொழிற்சாலை மேலாளர் ஹோ வூன் லியோங், 59, ஆகியோருக்கு பிணை வழங்கி , குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா ஒருவர் உத்தரவாதத்துடன், அவர்களின் கடப்பிதழ்களை ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் தீவிரத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சுகாதார நிலை ஆகியவற்றை அவர் கணக்கில் எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார். இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் நோர்ஷரிடா கூறினார்.
“இது ஒரு தீவிரமான வழக்கு. இது மக்களின் கவனத்தை ஈர்த்தது. எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தலா ஒருவர் உத்தரவாதத்துடன் 400,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது, ”என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர், பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால், ஐந்து பேரும் திருத்த விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.
தொழிற்சாலையிலிருந்து அபாயகரமான கழிவுகளை செப்டம்பர் 3-ஆம் தேதி சுங்கை கோங்கில் அகற்றியதன் மூலம் வேண்டுமென்றே குற்றம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் 1.2 மில்லியன் வீடுகளில் நீர் விநியோகம் பாதிப்புக்குள்ளானது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஐந்து முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் அனுபவிப்பார்கள்.