நியூயார்க் : இணைய வணிகத்தில் உலக அளவில் முன்னணி வகிக்கும் நிறுவனம் அமேசோன். இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மிகப் பிரபலம். சிறப்புக் கழிவுகளோடு நடைபெறும் ஆண்டு விற்பனையின்போது கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புடைய வணிகப் பரிமாற்றம் இணையம் வழி நடைபெறும்.
“அமேசோன் பிரைம் டே” (Amazon annual Prime Day sales event) என்ற இந்த விற்பனை எதிர்வரும் அக்டோபர் 13,14-ஆம் நாட்களில் நடைபெறும் என அமேசோன் அறிவித்தது.
வழக்கமாக ஜூலை மாதத்தில் இந்த விற்பனை நடைபெறும். இந்த முறை கொவிட்-19 தொற்று காரணமாக அக்டோபரில் நடைபெறுகிறது.
2015-ஆம் ஆண்டு ஜூலையில் அமேசோன் பிரைம் டே விற்பனை முதன் முதலாக நடத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த விற்பனை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்ட சமயத்தில் “பிளாக் ஃபிரைடே” (Black Friday) என்ற பெயரில் சிறப்புக் கழிவு விற்பனையை நடத்துவது அமேசோனின் வழக்கம்.
அமேசோன் பிரைம் டே மூலம் அந்நிறுவனத்தின் சந்தாதாரர்கள் சிறப்புக் கழிவுகளைப் பெறுவர். உலகம் முழுவதும் சுமார் 100 மில்லியன் பேர் அமேசோன் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.
சந்தாதாரர்களாக தொடர்வதற்காக அவர்கள் ஆண்டுக்கு 120 அமெரிக்க டாலர்கள் செலுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் இசைப்பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இலவச போக்குவரத்துக் கட்டணங்கள் போன்ற சலுகைகளைப் பெறுவர்.
அமேசோன் பிரைம் டே விற்பனை நடைபெறும் அக்டோபர் 13, 14 தேதிகளில் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் பெரும்பாலும் அமேசோன் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும்.
கொவிட்-19 பாதிப்புகளால் வணிகத்தில் பெரும் பயன் அடைந்த நிறுவனம் அமேசோன். இதன் காரணமாக அதன் பங்கு விலைகளும் கணிசமாக உயர்ந்து உலகின் மிகப் பெரிய பணக்காரராக அமேசோனின் உரிமையாளர் ஜெப் பெசோஸ் உயர்ந்திருக்கிறார்.
ஜூன் 30-ஆம் தேதியோடு முடிவடைந்த கடைசிக் காலாண்டில் தனது இணைய விற்பனை 88.9 பில்லியன் டாலராக இருந்தது என அமேசோன் அறிவித்தது. இது கடந்த இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது 40 விழுக்காடு உயர்வாகும்.
அமேசோனின் மொத்த நிகர வருமானம் இதே காலாண்டில் 5.2 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக உயர்ந்தது.