கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் செயல்படுத்தப்பட்டால், கொவிட்19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில துறைகளில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு உதவ முடியும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
மக்கள் சம்பந்தப்பட்ட பொருளாதார தூண்டுதல் தொகுப்பு (பிரிஹாதின்) மூலம் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட ஊதிய உதவித் தொகை 2.0, ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
“வேலையின்மை பிரச்சனையை முடிந்தவரை கட்டுப்படுத்துவதோடு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வது, மனித வள அமைச்சகத்தின் பொறுப்பு.
“கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் ஏற்படுத்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதில் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்.
“முக்கியமானது என்னவென்றால், இந்த சூழலை எதிர்கொள்ள நமக்கு வலுவான நிதி இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 23 அன்று, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஊதிய உதவித் தொகை 2.0- இன் கீழ் 2.4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இது பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.