Home One Line P1 துங்கு ரசாலி மதியம் 2 மணிக்கு மாமன்னரைச் சந்திப்பார்

துங்கு ரசாலி மதியம் 2 மணிக்கு மாமன்னரைச் சந்திப்பார்

1117
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா இன்று மதியம் 2 மணிக்கு மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடினை சந்திப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துங்கு ரசாலி உட்பட அவருடன் பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரைச் சந்திப்பார்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுல்தான் அப்துல்லாவுடனான சந்திப்பின் போது, புதிய பிரதமராக இருக்க விரும்பும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு, அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை அறிவிப்பார்கள் அல்லது நிராகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.

#TamilSchoolmychoice

முன்னாள் நிதியமைச்சரான 83 வயதான துங்கு ரசாலி மலேசியாவில் நீண்ட காலம் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினராவார். மேலும், அவரது சகாக்களால் மதிக்கப்படும் ஒரு செல்வாக்கு மிக்க மூத்த அரசியல்வாதியாகக் கருதப்படுகிறார்.

முன்னதாக இன்று, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி, அன்வார், சுல்தான் அப்துல்லாவுடன் ஒரு மணி நேர சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் காலை 10.25 மணியளவில் இஸ்தானா நெகாராவுக்கு வந்து காலை 11.30 மணியளவில், அரண்மனையிலிருந்து வெளியேறினார். அப்போது, அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் எந்தவொரு கருத்தும் கூறாமல் வெளியேறினார்.