கோலாலம்பூர்: “தொழில்நுட்ப பிழைகள்” அடிப்படையில் கொவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதில் இருந்து, அமைச்சரை விடுவிக்க வேண்டாம் என்று மசீச கேட்டுக்கொள்கிறது.
“தொழில்நுட்ப பிழைகளுக்காக அமைச்சர்கள் விடுவிக்கப்படுகையில், தனிமைப்படுத்தலை மீறியதற்காக சாதாரண மக்களை நாம் சிறையில் அடைக்க முடியாது,”
“வெவ்வேறு விதிமுறைகள் இருக்க முடியாது, ஏனென்றால் நாம் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக இருக்கிறோம், “என்று மசீச செய்தித் தொடர்பாளர் சான் குயின் எர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் கைருடின் அமான் கடந்த ஜூலை 3-ஆம் தேதி துருக்கிக்கு சென்று, ஜூலை 7-ஆம் தேதி மலேசியா திரும்பினார். அதனை அடுத்து அவர் தம்மை 14 நாட்கள் சுத தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை.
ஓர் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, ஒரு நபரை தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிடும்போது மட்டுமே அவர் “கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் தனிநபர்” என்ற கருத்தை வழக்கறிஞராக இருக்கும் சான் கேள்வி எழுப்பினார்.
ஜூலை மாதம் கைருடினின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்னர், வெளிநாட்டிலிருந்து நுழையும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும், 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் தெளிவாகக் கூறியிருப்பதை அவர் எடுத்துரைத்தார்.
“14பி பாரம் வழங்கப்பட்ட பின்னரே நீங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் நபராக ஆக மாட்டீர்கள். மலேசியாவிற்குள் வெளிநாட்டிலிருந்து நுழைந்தால் அல்லது நீங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுத்தப்படுபவராக இருப்பீர்கள். கைருடின் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற்றிருந்தால், அதனை அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும்.”
“இல்லையெனில், இது ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது. 14 பி பாரம் வழங்க அதிகாரிகள் மறந்துவிடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுத்தப்படும் ஒருவர், தனிமைப்படுத்தலை மேற்கொள்ளாமல் அதனை மீறுவார்” என்று அவர் கூறினார்.
எந்த விதிகளையும் மீறவில்லை என்றால், தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைருடினுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் ஏன் வழங்கப்பட்டது என்றும் சான் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, நேற்று, அமைச்சர் கைருடின் அமான் ரசாலி மீதான தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பில் , சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை (என்எப்ஏ) என்று வகைப்படுத்தி உள்ளதாக புக்கிட் அமான் இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்திருந்தார்.
கைருடினுக்கு தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் (சட்டம் 342) கீழ் வீட்டு கண்காணிப்பு உத்தரவு (படிவம் 14 பி) வழங்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என்று அவர் விளக்கினார்.
“வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சட்டம் 342- இன் பிரிவு 15 (1)- இன் கீழ் அமைச்சருக்கு உத்தரவு வழங்கப்படவில்லை
“அந்த அறிக்கையின் அடிப்படையில், சடத்துறைத் தலைவர் அலுவலகம் அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. மேலும், சட்டம் 342- இன் கீழ் அக்குற்றச்சாட்டின் அடிப்படையில் வலுவான அறிக்கை எதுவும் இல்லை” என்று அவர் கூறினார்.