Home One Line P1 மலாய் ஆட்சியாளர்கள் அரண்மனை வந்தடைந்தனர்

மலாய் ஆட்சியாளர்கள் அரண்மனை வந்தடைந்தனர்

656
0
SHARE
Ad

கோலாலம்பூர் : (பிற்பகல் 2.30 மணி நிலவரம்)

இன்று பிற்பகலில் தொடங்கும் மலாய் ஆட்சியாளர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள சுல்தான்கள் கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் உள்ள அரண்மனையை வந்தடைந்தனர்.

மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா பிற்பகல் 12.30 மணியளவில் அரண்மனை வந்தடைந்தார்.

பிற்பகல் 1.30 மணியளவில் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அரண்மனையை வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice

பத்திரிகையாளர்கள் அரண்மனை வாயில்களின் முன்னால் குவிந்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொவிட்-19 தொடர்பில் அவர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது.

பத்திரிகையாளர்கள் அனைவரும் தங்களை மைசெஜாத்திரா குறுஞ்செயலி வழியாகப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

அவசர காலம் அமுலாக்கமா?

கொவிட்-19 தொற்று அதிகரிப்பால் நாட்டில் அவசர காலத்தை அமுல்படுத்த பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து மாமன்னரிடமும் பரிந்துரைந்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 23) காலையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி நாட்டில் அவசர காலத்தை அமுல்படுத்த ஒப்புதலைப் பெற்றார் பிரதமர் மொகிதின் யாசின்.

அதைத் தொடர்ந்து அன்றைய தினமே பிற்பகலில் குவாந்தான் சென்று தனது அமைச்சரவையினருடன் மாமன்னரைச் சந்தித்தார் மொகிதின் யாசின்.

அவசர காலத்தைப் பிறப்பிக்க மாமன்னரின் ஒப்புதல் தேவை என்பதால் மாமன்னரின் ஒப்புதலுக்காக நாடே காத்திருக்கிறது.

இந்நிலையில் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கருத்துகளைக் கேட்டபின்னர் தனது முடிவை அறிவிப்பதாக மாமன்னர் அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தலைநகரில் மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் மாநில ஆளுநர்களோ, அல்லது அரசியல்வாதிகளோ கலந்து கொள்ள மாட்டார்கள். முழுக்க முழுக்க மலாய் ஆட்சியாளர்களே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முடிவெடுப்பார்கள்.

அரசியல் அமைப்பு சட்டத்தின்படி முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் மாமன்னருக்கே உண்டு. என்றாலும், தனது சக மலாய் ஆட்சியாளர்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே முடிவெடுக்கப் போவதாக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்திருக்கிறார்.

மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் தனது முடிவை மாமன்னர் பிரதமரிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர காலம் அமுல்படுத்தப்பட்டால் அதன் மூலம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்படும். மொகிதின் தலைமையிலான அரசாங்கமே தொடர்ந்து ஆட்சியை நடத்தும்.

மாமன்னர் இதற்கான ஒப்புதலை வழங்குவாரா என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.