கோலாலம்பூர் : (மாலை 5.30 மணி நிலவரம்)
இன்று பிற்பகலில் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்களின் மன்றக் கூட்டத்தில் அவசர காலம் பிறப்பிப்பதா இல்லையா என்ற முடிவு எடுப்பதாக இருந்தது.
எனினும் இன்று மாலை 5.30 மணி வரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கொவிட்-19 தொற்று அதிகரிப்பால் நாட்டில் அவசர காலத்தை அமுல்படுத்த பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து மாமன்னரிடமும் பரிந்துரைந்திருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 23) காலையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி நாட்டில் அவசர காலத்தை அமுல்படுத்த ஒப்புதலைப் பெற்றார் பிரதமர் மொகிதின் யாசின்.
அதைத் தொடர்ந்து அன்றைய தினமே பிற்பகலில் குவாந்தான் சென்று தனது அமைச்சரவையினருடன் மாமன்னரைச் சந்தித்தார் மொகிதின் யாசின்.
அவசர காலத்தைப் பிறப்பிக்க மாமன்னரின் ஒப்புதல் தேவை என்பதால் மாமன்னரின் ஒப்புதலுக்காக நாடே காத்திருக்கிறது.
இந்நிலையில் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கருத்துகளைக் கேட்டபின்னர் தனது முடிவை அறிவிப்பதாக மாமன்னர் அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தலைநகரில் மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் கூடியது.
இந்தக் கூட்டத்தில் மாநில ஆளுநர்களோ, அல்லது அரசியல்வாதிகளோ கலந்து கொள்ளவில்லை. முழுக்க முழுக்க மலாய் ஆட்சியாளர்களே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவசர காலம் குறித்து முடிவெடுப்பார்கள்.
அரசியல் அமைப்பு சட்டத்தின்படி முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் மாமன்னருக்கே உண்டு. என்றாலும், தனது சக மலாய் ஆட்சியாளர்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே முடிவெடுக்கப் போவதாக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்திருக்கிறார்.
மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் தனது முடிவை மாமன்னர் பிரதமரிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர காலம் அமுல்படுத்தப்பட்டால் அதன் மூலம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்படும். மொகிதின் தலைமையிலான அரசாங்கமே தொடர்ந்து ஆட்சியை நடத்தும்.
மாமன்னர் இதற்கான ஒப்புதலை வழங்கப் போகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.