Home One Line P1 “தேசியக் கூட்டணிக்கே எங்களின் ஆதரவு” அம்னோ முடிவு

“தேசியக் கூட்டணிக்கே எங்களின் ஆதரவு” அம்னோ முடிவு

656
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை அக்டோபர் 26 ஆம் நாள் இரவு கூடிய அம்னோ உச்ச மன்றக் கூட்டம் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் நடப்பு தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு தர முடிவெடுத்தது.

எனினும் தேசியக் கூட்டணியுடன் தங்களுக்கு கூடுதல் ஒத்துழைப்பும் மரியாதையும் அரசியல் புரிந்துணர்வும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அம்னோ உச்சமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது.

அம்னோவின் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்  முன்வைத்த பிகேஆர் கட்சியுடன் இணைந்து பணியாற்றும் பரிந்துரையையும் அம்னோ உச்ச மன்றக் கூட்டம் நிராகரித்தது.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியுடனும் ஜனநாயகச் செயல் கட்சியுடனும் இணைந்து பணியாற்றும் பரிந்துரையையும் அம்னோ உச்ச மன்றம் நிராகரித்தது.

இரவு எட்டரை மணிக்கு, தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் தொடங்கிய அம்னோ உச்ச மன்றக் கூட்டம் நள்ளிரவைத் தாண்டி 12.45 மணி வரை நீடித்தது.

அதன் பின்னர் முன்னிரவு 1.06 மணிக்கு (இன்று அக்டோபர் 27 அதிகாலை) அம்னோவின் தேசிய தலைவர் சாஹிட் ஹாமிடி வெளியிட்ட அறிக்கையில்  அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார்.

எனினும் மிகக் கவனமுடன் தயாரிக்கப்பட்ட அந்த ஒரு பக்க அறிக்கையில் எந்த இடத்திலும் மொகிதின் யாசின் என்ற பெயரோ அவருக்கு ஆதரவு என்ற வாசகமோ குறிப்பிடப்படவில்லை. மாறாக, தேசியக் கூட்டணிக்கு ஆதரவு என்று மட்டுமே அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.

நடப்பு தேசிய கூட்டணி அரசாங்கத்தை அம்னோ தொடர்ந்து ஆதரிக்கும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இரு தரப்புக்கும் இடையில் அரசியல் புரிந்துணர்வும், பரஸ்பர மதிப்பும் மரியாதையும் இணைந்த ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோரிக்கை விடுத்தது.

அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய அணுகுமுறை தேவை

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொள்வதிலும் அதன் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார அழுத்தத்தை சமாளிக்கவும்அரசியல் நிலைப்பாட்டையும் தாண்டி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை தேசியக் கூட்டணி அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அம்னோவின் அறிக்கை வலியுறுத்தியது.

மாமன்னர் விடுத்திருக்கும் உத்தரவை முழுமையாக ஆதரிப்பதாகவும் மலாய் ஆட்சியாளர்களின் ஆலோசனையைப் பெரிதும் மதிப்பதாகவும் அம்னோ உச்ச மன்றக் கூட்டம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட அரசியல் எதிர்ப்புகளுக்கும் மோதல்களும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாக அம்னோ கூறியிருக்கிறது.

முவாபாக்காட் நேஷனல் உடன்பாடு வலிமைப்படுத்தப்படும்

அம்னோவின் கடந்த பொதுப் பேரவையில் பாஸ் கட்சியுடன் அரசியல் ஒத்துழைப்பு வழங்கும் முவாபாக்காட் நேஷனல் உடன்பாடு காணப்பட்டது. அந்த உடன்பாட்டை மேலும் வலிமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சாஹிட் ஹாமிடியின் அறிக்கை அறிக்கை தெரிவித்தது.

நேற்று பிற்பகல் நடைபெற்ற தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அம்னோ கவனத்தில் எடுத்துக்கொண்டு விவாதித்தது.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் முடிவை தேசிய முன்னணி எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினர்.