Home One Line P2 திரைவிமர்சனம் : “சூரரைப் போற்று” – முயற்சியோடு போராடினால் வெற்றி

திரைவிமர்சனம் : “சூரரைப் போற்று” – முயற்சியோடு போராடினால் வெற்றி

1095
0
SHARE
Ad

எடுத்த எடுப்பிலேயே ‘சூரரைப் போற்று’ படத்தில் நம்மைக் கவரும் அம்சம் அதன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு. தமிழ்ப் படத்திற்கு உரிய இலக்கணங்கள் பலவற்றை முறியடித்திருக்கிறது இந்த திரைப்படம்.

சின்னச் சின்ன காட்சிகளாக படம் வேகமாக பரபரப்புடன் நகர்கின்றது. எங்கேயும் தொய்வில்லை. வழக்கமான கட்டிப்பிடித்து காதல் செய்யும் பாடல்கள் இல்லை. அதேசமயம் கணவன், மனைவிக்கிடையிலான காதல், அன்பு, குடும்ப சிக்கல்கள் மிக இயல்பாக சம்பவங்கள் மூலம் காட்டப்படுகின்றன.

தாய் மகன் பாசம், தந்தை மகன் பிணக்குகள், நட்பு, குடும்ப உறுப்பினர்களின் கலகலப்புகளையும், இயல்பாக கலந்து பரிமாறியிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

ஒரு போராட்ட மனிதனின் வாழ்க்கை வரலாற்று படம். மிக எளிதாக அறிவுரை கூறும் வசனங்களை இயக்குனர் இதற்குள் புகுத்தி இருக்க முடியும். ஆனால் எங்கேயும் அதை அவர் முயற்சி செய்யவில்லை.

நெடுமாறன் என்ற போராளியின் முயற்சிகளையும் அவர் சந்திக்கும் இடையூறுகளையும் சம்பவங்களாகவும் சுருக்கமாகவும் அதேசமயம் சுளீரென்று உரைக்கும் வசனங்களாலும், காட்சியமைப்புகளாலும் நமக்குக் கடத்துகிறார் இயக்குநர் சுதா கொங்கரா. ஏற்கனவே, மாதவன் நடிப்பில் “இறுதிச் சுற்று” படம் தந்து நம்மைக் கவர்ந்தவர்.

இந்தியாவில் ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை உருவாக்கி, மலிவு விலைப் பயணத்தை அறிமுகப்படுத்தப் போராடிய ஜி.ஆர்.கோபிநாத் என்ற தனிமனிதனின் உண்மை வாழ்க்கைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கே உரிய பின்புலத்துடன் படக் கதையை அமைத்து இருக்கின்றனர்.

டெக்கான் ஏர் பின்னணியின் உண்மையான கதாநாயகனான கோபிநாத் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். Simply Fly: A Deccan Odyssey என்ற அவரது நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் சுதா கொங்கரா.

கதை – மூலக் கதை

சோழவந்தான் என்ற மதுரை பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண ஆசிரியரின் மகனாக, பின்தங்கிய நாவிதர் சமூகத்தில் பிறந்து தனது கல்வியாலும் போராட்டத்தாலும் சிகரங்களைத் தொடுகிறார் நெடுமாறன் (சூர்யா).

வணிக ரீதியாகவும், அதே வேளையில் மலிவு விலை விமான பயணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கும் போராட்டம் நடத்தும் இளைஞர் நெடுமாறன் என்ற பெயர் கொண்ட சூர்யா பணபலம் இல்லாதவர். நிறைய அறிவாற்றலையும் செயல்படுத்தும் திறனையும் மட்டுமே கொண்டிருக்கிறார்.  வங்கிகளிடமும், முதலீட்டாளர்களிடமும், மற்ற பெரிய தொழிலதிபர்களோடும், அரசாங்க அதிகாரிகளோடும் அவர் நடத்தும் போராட்டமும் எதிர்கொள்ளும் இடையூறுகளும்தான் கதை.

ஏற்கனவே நமது மலேசியாவில் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், பிரிட்டனில் ரிச்சர்ட்ஸ் பிரான்சன் போன்றவர்களும் இதே போன்ற சோதனைகளைத் தாண்டித்தான் அவற்றை சாதனைகளாக்கி வெற்றி பெற்றனர்.

படம் முழுக்க தான் எடுத்துக்கொண்ட திட்டத்தை செயல்படுத்த அவர் நடத்துகின்ற போராட்டங்கள், எடுக்கின்ற முயற்சிகள், ஒருகட்டத்தில் நமக்கே போரடித்தாலும், தளராத மனம் கொண்ட, அந்தக் கதாபாத்திரம் போன்று முரட்டு பிடிவாதமும் போராடும் தன்மையும் நமக்கும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற சிந்தனை இறுதியில் நமக்குள் இயல்பாகவே விதைக்கப்படுகிறது.

கவரும் அம்சங்கள்

நம்மைக் கவரும் இன்னொரு கதாபாத்திரம் சூர்யாவின் அம்மாவாக வரும் ஊர்வசி. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் வழக்கமாக மனைவியாகவும் மகன் தோல்விகளைச் சந்திக்கும் போது கண்ணீர் வடிக்கும் தாயாகவும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

பலகாரங்களை மகனுக்கு அனுப்பும் சின்ன காட்சிகளில் கூட வசனத்தை உச்சரிக்கும் விதத்தில் தனது நகைச்சுவை உணர்வு வெளிப்படுத்துவதிலும் ஊர்வசி கவர்கிறார்.

படம் முழுக்க சூர்யாவின் ஆதிக்கம்தான். எனவே மற்ற கதாபாத்திரங்கள் யாரும் பெரிய அளவில் வடிவமைக்கப்படவில்லை. இருந்தாலும் சில கதாபாத்திரங்களின் தன்மையும் உணர்வுகளும் நன்கு பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக வில்லத்தனமான தொழிலதிபராக வரும் பரேஷ் ரவால், சூர்யாவை முன்னேற முடியாமல் தடுக்கும் விதத்தில் குரூரமான எண்ணம் கொண்ட தொழிலதிபரைக் கண் முன்னே காட்டுகிறார்.

சூர்யாவின் விமானப்படை மேலதிகாரியாக முதலில் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மோகன் பாபு பின்னர் அவரது போராட்டத்தை உணர்ந்து அவருக்காக தோள் கொடுக்க முன்வருவதாக கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்சியில் சூர்யா அப்துல் கலாம் அதிபராக இருந்தபோது அவரைச் சந்திக்கப் போராட்டம் நடத்தி தனது பிரச்சினைகளைச் சொல்லி ஆதரவுக் கடிதம் வாங்கினார் என்பது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

இயக்குநருக்குப் பிறகு ஒட்டுமொத்த திரைப்படத்தின் ஆக்கத்திற்கும் பாராட்டுகள் படத் தொகுப்பாளரைத்தான் போய்ச் சேரவேண்டும். வெகுசுலபமாக நம்மை போரடிக்க வைத்திருக்கக் கூடிய திரைக்கதையில் இத்தனை விறுவிறுப்புகளையும், உடனுக்குடன் காட்சிகளை நகர்த்துவதிலும் கடுமையாக உழைத்திருக்கிறார்.

சூர்யாவின் நண்பராக வரும் விவேக் பிரசன்னா பெருமளவில் உடம்பைக் குறைத்து நடிப்பில் மெருகேற்றியிருக்கிறார்.

கதாநாயகியாக வரும் புதுமுகம் அபர்ணா பாலமுரளி. சில காட்சிகளில் வந்தாலும் பரவாயில்லை இரக நடிப்பு.

சின்னத் திரையில் பார்ப்பதால் ஒளிப்பதிவின் பிரம்மாண்டத்தை இரசிக்க முடியவில்லை.

திரையரங்கில் பிரமாண்டமாக நாம் பார்த்து மகிழ்ந்து இருக்க வேண்டிய படம்.

ஆனால் நடப்பு சூழ்நிலைகளால் ஓடிடி எனப்படும் அமேசான் பிரைம் கட்டண வலைத்திரையில் நேற்று வியாழக்கிழமை நவம்பர் 12 முதல் வெளியாகியிருக்கின்றது ‘சூரரைப் போற்று’.

கட்டண வலைத்திரையில் வெளியாகும் முதல் பிரம்மாண்ட தமிழ்ப் படம் என்ற பெருமையையும் பெறுகிறது இந்தப் படம்.

படத்திற்கான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வாய்ப்பிருந்தால் கண்டுகளியுங்கள். மனம் தொய்வடைந்து உற்சாகம் குறைந்து  நடப்பு சூழ்நிலைகளால் வாழ்க்கையில் அவநம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு ‘சூரரைப் போற்று’ நிச்சயம் தன்னம்பிக்கையை விதைக்கும்.

முயற்சிகளின் போராட்டத்திற்கு என்றும் தோல்வியில்லை என்ற மன உறுதியை நிச்சயம் ஏற்படுத்தும்.

-இரா.முத்தரசன்