Home One Line P2 இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்

இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்

676
0
SHARE
Ad
இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி

மாஸ்கோ : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானார்.

தமிழ்நாட்டுக்கு பலமுறை வருகை தந்திருக்கும் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2010-இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகச் செம்மொழி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

மாஸ்கோ மருத்துவமனை ஒன்றில் காலமான அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி கொவிட்-19 தொற்றால் காலமானார் என்பது சோகமான செய்தியாகும்.

#TamilSchoolmychoice

இந்தத் தகவல்களை அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் நண்பரும் இந்தோ-ரஷிய வாணிப மன்றத்தின் செயலாளருமான பி.தங்கப்பன் தெரிவித்தார்.

மாஸ்கோ மாநிலப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழி பேராசிரியராகப் பணியாற்றிய அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி பல தமிழ்நாட்டு தமிழ் அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் நண்பர்களாகக் கொண்டவர்.

சோவியத் இரஷியா பல நாடுகளாக உடைந்து தனித்தனி நாடுகளாக செயல்படத் தொடங்கிய பிறகு இரஷியாவில் தமிழ்மொழி படிக்கும் ஆர்வம் குறைந்தது. அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி தனிநபராகப் பாடுபட்டு தமிழ் படிக்கும் ஆர்வத்தைத் தனது மாணவர்களிடையே உருவாக்கினார்.

ஆண்டுதோறும் தமிழ் சங்கப் பாடல்கள் குறித்த பயிலரங்கத்தை மாஸ்கோவில் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நடத்தி வந்தார்.

பாரதியார் நூற்றாண்டு விழாவிலும் கலந்து கொண்ட அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி அப்போது சேலத்தில் பாரதியார் சிலையையும் திறந்து வைத்தார்.

ஒருமுறை இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்தபோது, எனது பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா என அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியை இளையராஜா கேட்டார். அப்போது “இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது” என்ற சிகப்பு ரோஜாக்கள் பாடலை அலெக்சாண்டர் பாடிக் காட்டினார். இளையராஜாவும் அசந்து போனார்.

அலெக்சாண்டர் மறைவுக்கு பல தமிழறிஞர்களும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தகவல் : நன்றி – தி ஹிண்டு

அடுத்து :

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வழங்கிய இரங்கல்