Home One Line P2 டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?

டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?

695
0
SHARE
Ad

Selliyal | Trump’s life as former President of USA | 21 November 2020

“டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?” என்ற தலைப்பில் செல்லியல் காணொலித் தளத்தில் 21 நவம்பர் 2020-இல் இடம் பெற்ற செல்லியல் காணொலியின் கட்டுரை வடிவம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 2021 ஜனவரி 20-ஆம் தேதிக்கு முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டியதிருக்கும்.

ஜனவரி 20-ஆம் தேதிதான் புதிய அதிபரான ஜோ பைடன் பதவியேற்பார்.

#TamilSchoolmychoice

முன்னாள் அதிபர் என்ற முறையில் டொனால்ட் டிரம்ப் வாழ்க்கை இனி எப்படியிருக்கும்? அவருக்கு எத்தகைய சலுகைகள் கிடைக்கும்? ஓய்வூதியமாக எவ்வளவு வழங்கப்படும்?

சட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ள, இந்த சுவாரசியமான விவரங்களைப் பார்ப்போம்!

இரகசியக் காவல் துறை பாதுகாப்பு

உயிரோடு இருக்கும் வரை எல்லா முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கும், முழுமையான இரகசியக் காவல்துறை பாதுகாப்பு வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட வேண்டும். எனவே, டிரம்புக்கு அதிபர் பதவியை விட்டுச் சென்றாலும் முழுமையான காவல் துறை பாதுகாப்பு கிடைக்கும்.

ஓய்வூதியத் தொகை

பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் அமெரிக்க நிதியமைச்சிலிருந்து ஆண்டுக்கு US$ 219,200 அமெரிக்க டாலர்களை பென்ஷன் எனப்படும் ஓய்வூதியத் தொகையாகப் பெறுவார்.

அதாவது நமது மலேசிய ரிங்கிட்டின் இன்றைய மதிப்பில் ஆண்டுக்கு சுமார் RM896,528-00 ரிங்கிட். மாதத்திற்கு கணக்கிட்டால் US$18,266 அமெரிக்க டாலர்கள். அதாவது   மாதத்திற்கு RM 74,710 ரிங்கிட்.

முன்னாள் அதிபரின் மனைவிக்கும் ஆண்டுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் ஓய்வூதியம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். மற்ற அரசாங்க ஓய்வூதியம் எதையும் அவர்கள் பெறாவிட்டால் மட்டுமே இந்த ஓய்வூதியம் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஆக இந்தத் தொகையெல்லாம் டிரம்புக்கும் அவரது மனைவி மெலானியா டிரம்புக்கும் இனி கிடைக்கும்.

ஏற்கனவே பெரும் கோடீஸ்வரரான டிரம்புக்கு இந்தத் தொகையெல்லாம் ஒரு பொருட்டா, தேவையா என்பது வேறு விஷயம்!

பதவி விலகிச் செல்ல செலவினங்கள்

ஓர் அதிபர் தனது பதவியிலிருந்து விலகிச் செல்லும்போது அதற்காக ஏற்படும் செலவினங்களும் அவருக்கு வழங்கப்படும். அதன்படி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதற்காக அடுத்த 7 மாதங்களுக்கான செலவினங்களை டிரம்ப் பெற முடியும்.

புதிய அலுவலகம் அமைப்பதற்கான செலவு, அலுவலக வாடகை, தனக்காக வேலை செய்யும் பணியாட்களுக்கு வழங்கவேண்டிய சம்பள நஷ்ட ஈடு, தொடர்புத் துறை செலவுகள், அச்சு செலவுகள், தபால், போக்குவரத்து என பதவி விலகுவதில் தொடர்புடைய செலவினங்களை டிரம்ப்புக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கும்.

அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் தனது அலுவலகத்தை முன்னாள் அதிபர் ஒருவர் அமைத்துக் கொள்ள முடியும்.

ஊழியர்களுக்கான சம்பளமும் வழங்கப்படும்  

தனிப்பட்ட அலுவலகப் பணியாளர்களை அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் டிரம்ப் நியமித்துக் கொள்ளலாம். அவர்கள் தங்களை நியமிக்கும் முன்னாள் அதிபர்களுக்கு மட்டுமே பணியாற்ற முடியும். சம்பளத்தை முன்னாள் அதிபரே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் முதல் 30 மாதங்களுக்கு ஆண்டுக்கு 150,000 அமெரிக்க டாலர்களை மட்டுமே அரசாங்கம் வழங்கும். அதன் பின்னர் ஆண்டுக்கு 96,000 டாலர்கள் முன்னாள் அதிபரின் பணியாட்களுக்கு வழங்கப்படும்.

மருத்துவ வசதிகள்

எல்லா முன்னாள் அதிபர்களும் அமெரிக்க இராணுவ மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் பெறத் தகுதி பெற்றவர்களாவர். மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான உடல்நலத்துக்கான காப்புறுதியை இரண்டு தவணைகள் அதிபராக இருந்தவர் பணம் செலுத்திப் பெற முடியும். ஆனால் இத்தகையக் காப்புறுதியை ஒரு தவணை மட்டுமே அதிபராக இருந்த டிரம்ப் பெறத் தகுதியில்லை.

பயணச் செலவுகள்

முன்னாள் அதிபர் ஒருவரும், அவருடன் பயணம் செய்யும் இரண்டு ஊழியர்களுக்கும் சேர்த்து 1 மில்லியன் டாலர்கள் வரை ஓராண்டுக்கான பயணச் செலவுகளாக அவர்கள் கேட்டுப் பெறலாம்.

முன்னாள் அதிபர்களின் மனைவிக்கும் ஆண்டுக்கு 500,000 அமெரிக்க டாலர் அவர்களின் அதிகாரபூர்வ பயணச் செலவுக்கும் பாதுகாப்புக்கும் வழங்கப்படும்.

எனவே, டிரம்ப்பும் அவரது மனைவியும் இனி வெளிநாடுகளுக்குச் சென்றால் அவர்களுக்கான பயணச் செலவுகளை அரசாங்கமே மேற்குறிப்பிட்ட தொகை வரைக்கும் வழங்கும்.

டிரம்ப் நூல் எழுதுவாரா? தொலைக்காட்சித் தொடர் படைப்பாரா?

பொதுவாக முன்னாள் அதிபர்கள் தங்களின் வாழ்க்கை வரலாற்றையும், அமெரிக்க அதிபராக இருந்தபோது நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களையும் நூலாக எழுதி கோடிக்கணக்கில் சம்பாதிப்பது வழக்கம்.

பராக் ஒபாமாவும் தனது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி தற்போது வெளியிட்டிருக்கிறார்.

டிரம்ப் தனது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கினால் அதற்கு பெரும் தொகையை அவரால் பெற முடியும்.

ஆனால், டிரம்ப் அதிபராவதற்கு முன்னர் தொலைக் காட்சித் தொடர் ஒன்றைப் படைத்தவர். தி அப்ரெண்டிஸ் (The Apprentice) என்ற பெயரில் தனது நிறுவன நிர்வாகிகளை நேர்முகக் காணல்வழி அவர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி அப்போதைக்கு மிகவும் பிரபலமானது.

எனவே, அதுபோன்ற நிகழ்ச்சிகளையும் அவர் படைக்க முன்வந்தால், தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தயாரிப்பார்கள் என்பது உறுதி.

டிரம்ப் தனது ஓய்வு காலத்தில் மீண்டும் வணிக முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும், பல கோடிகளைக் கொண்ட நிறுவனங்களை நிர்வகித்துக் கொண்டும் இருப்பார்.

அதே வேளையில் நூல் எழுதுவாரா? அல்லது தொலைக்காட்சித் தொடர் பக்கம் கவனத்தைச் செலுத்துவாரா என்பதை அமெரிக்க ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

நிகழ்ச்சிகளில் உரையாற்றினால் பணம் கொட்டும்

உலகம் முழுவதும் சென்று மாநாடுகளிலும், பல்கலைக் கழகங்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றி முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பெரும் பணம் சம்பாதிப்பது வழக்கம்.

அந்த வாய்ப்பை டிரம்ப் தொடர நினைத்தால், அதன் மூலமும் அவருக்கு பெரும் வருமானம் கிடைக்கும். எனவே, கோவிட்-19 பிரச்சனைகள் தீர்ந்தவுடன் டிரம்ப் பல இடங்களுக்குச் சென்று உரையாற்றி வருமானம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த அதிபராகப் போட்டியிடத் தயாராவாரா?

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியவுடன் மீண்டும் அடுத்த அதிபர் தேர்தலில் 2024-ஆம் ஆண்டில் போட்டியிட டிரம்ப் தயாராவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

74 வயதான டிரம்புக்கு அடுத்த அதிபர் தேர்தலின்போது வயது 78 ஆகியிருக்கும்.

இதே 78 வயதில்தான் ஜோ பைடன் அதிபராகி அமெரிக்க வரலாற்றில் வென்ற மிக மூத்த வயதுடைய அதிபர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

அந்த சாதனையை டிரம்ப் முறியடிக்க முன்வரலாம். அவரது உடல்நலம் அதற்கு ஒத்துழைக்குமா என்பது அப்போதுதான் தெரியும். எனினும், தோல்வியை விரும்பாதவர் டிரம்ப். தனது வாழ்நாளின் இன்னொரு இறுதி முயற்சியாக மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மோதிப் பார்க்க முன்வரலாம்.

அதற்கு அவர் முதலில் 2016-ஆம் ஆண்டில் செய்ததைப் போன்று குடியரசுக் கட்சி வேட்பாளராக பலருடன் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

ஐவாங்கா டிரம்ப்

டிரம்பின் மகள் ஐவாங்கா டிரம்ப் 2024 தேர்தலில் அடுத்த அதிபராகப் போட்டியிட ஆர்வம் கொண்டிருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

2016 அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து பாடுபட்டவர் ஐவாங்கா. கடந்த 4 ஆண்டுகளிலும் வெள்ளை மாளிகையின் எல்லா நடவடிக்கைகளிலும் நேரடியாக தந்தையாரோடு ஈடுபட்டவர். சிறந்த அறிவாற்றல் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

எனவே, தனது மகளை அடுத்த அதிபராக முன்னிறுத்த, அதற்காகப் பாடுபட டிரம்ப் முன்வரலாம் என்றும் கருதப்படுகிறது.

எப்போதுமே உலக ஊடகங்களின் கவனத்தில் இருப்பவர் டிரம்ப். அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் என்ன செய்யப் போகிறார், எத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவார் என்பதைக் காண ஊடகங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன.

மரணத்துக்குப் பின்னரும் மரியாதை

ஆர்லிங்க்டன் தேசிய மயானம்

இறுதியாக மரணத்திற்குப் பின்னரும் ஒரு முன்னாள் அதிபருக்கு அமெரிக்க அரசாங்கம் இறுதிச் சடங்குகளுக்கு உரிய மரியாதையை வழங்குகிறது.

முன்னாள் அதிபர்கள் மரணமடைந்தால் முழு அரசாங்க மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவர்.

அது மட்டுமல்ல! முன்னாள் அதிபர்கள் விரும்பினால் அவர்களில் நல்லுடல்களை ஆர்லிங்க்டன் தேசிய மயானத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி

ஆர்லிங்க்டன் தேசிய மயானம் என்பது மரணமடையும் அமெரிக்க உயர் இராணுவ வீரர்களை நல்லடக்கம் செய்ய உருவாக்கப்பட்டதாகும். சுமார் 400 ஆயிரம் போர்வீரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த மயானம், மிகவும் மரியாதைக்குரிய இடமாகப் போற்றப்படுகிறது.

முன்னாள் அதிபர் ஜோன் எஃப்.கென்னடி இங்கேதான் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

-இரா.முத்தரசன்