கோலாலம்பூர்: மக்களவையில் 2021 வரவு செலவு திட்டத்திற்கான வாக்களிப்பு நாளை வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அது அடுத்த திங்கட்கிழமை (நவம்பர் 30) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவு செலவு திட்டத்திற்கான வாக்களிப்பு தள்ளிவைக்கப்படும் என்று நம்பத்தக வட்டாரம் கூறியதாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.
“எனது அமைச்சு இன்று விவாதத்தை முடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அது நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, வாக்களிப்பு நடந்தாலும் அது நாளை நடைபெறாது. அடுத்த திங்கட்கிழமை நடைபெறலாம்,” என்று வட்டாரம் கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக அவரது அமைச்சகம் இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நாடாளுமன்றத்தில் இருந்து பெறவில்லை என்று வட்டாரம் கூறியுள்ளது.
“இருப்பினும், எல்லா அமைச்சகங்களும் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் முடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அமைச்சர்கள் தங்கள் உரைகளை குறைக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
ஆரம்பத்தில், நாடாளுமன்ற நாட்காட்டியில், அமைச்சர்கள் தங்கள் விவாதங்களை முடிவு செய்வதற்கான ஆரம்ப தேதி நவம்பர் 23- ஆகும். ஆனால், அது நவம்பர் 25, பின்னர் நவம்பர் 26- க்கு மாற்றப்பட்டது.