கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) அரசாங்கத்தால் அறிவிக்க ஒரு நல்ல செய்தி இருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடன் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியும், நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுடன் மக்களவையில் சந்தித்ததாக அம்னோ பொதுச்செயலாளரான அவர் தனது டுவிட்டர் கணக்கின் மூலம் நேற்று தெரிவித்திருந்தார்.
சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில், கடன் தள்ளுபடி கால அவகாச நீட்டிப்பு, மற்றும் ஈபிஎப் கணக்கு 1-லிருந்து பணம் பெறுவதும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“26/11/2020 வியாழக்கிழமை அவரது (நிதியமைச்சர்) அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஒரு நல்ல செய்தி இருக்கும் என்று நான் நம்புகிறேன், ” என்று அவர் கூறினார்.
சந்திப்பில் அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் மற்றும் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ தாஜுடின் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்க சார்பு கட்சியான தேசிய முன்னணி 2021 வரவு செலவு திட்டத்திற்கு டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் நிபந்தனைகள் அளித்துள்ளதால் இந்த வாக்களிப்பை பெரும் ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
தேசிய முன்னணி, ஆறு மாதங்களுக்கு கடன் தள்ளுபடி கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும், ஈபிஎப் நிதியிலிருந்து 10,000 ரிங்கிட்டை திரும்பப் பெறவும் கேட்டுக்கொண்டது.
எதிர்க்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மக்களின் நலனுக்காக திருத்தங்கள் செய்யப்பட்டால் மட்டுமே 2021 வரவு செலவு திட்டத்திற்கு முழு ஆதரவு கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.