கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா தேசிய கூட்டணி நிர்வாகத்தின் பெரும்பான்மையை தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் துறை மற்றும் நிதி அமைச்சகத்திற்கான 2021 வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில் இரண்டு பகுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத ஐந்து அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களில் துங்கு ரசாலியும் அடங்குவார்.
உடன்படாத வாக்குகளை விட, அதிக ஆதரவு வாக்குகளைப் பெற்ற பிறகு இந்த ஒதுக்கீடுகளும் நேற்று திங்கட்கிழமை அங்கீகரிக்கப்பட்டன.
“நாங்கள் அதற்கு முன்னரே திரும்பிச் சென்று விட்டோம். துங்கு ரசாலி வரவு செலவு விவாதங்களில் பங்கேற்க மாட்டார். அவர் அரசாங்கத்தின் பெரும்பான்மையை அங்கீகரிக்காதவரை பங்கேற்கமாட்டார்,” என்று அவரது உதவியாளர் கூறியதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.
தேசிய கூட்டணி அரசாங்கத்தின் பெரும்பான்மை சோதனைக்கு உட்படுத்தப்படாத வரையில் வரவு செலவு திட்டத்தில் விவாதத்தில் ஈடுபட முடியாது என்ற தனது முடிவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருணுக்கு தெரிவிக்க துங்கு ரசாலி முன்பு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.