Home One Line P1 விக்னேஸ்வரன் – சரவணன், தயாளனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்

விக்னேஸ்வரன் – சரவணன், தயாளனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்

709
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தங்களுக்கு எதிரான அவதூறுப் பேச்சுகளைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்த தயாளன் ஸ்ரீபாலன் என்ற நபருக்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், மஇகா தேசியத் துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ எம்.சரவணனும் இன்று புதன்கிழமை (டிசம்பர் 23) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பெற்றனர்.

தயாளனுக்கு எதிராக அவதூறு வழக்கொன்றைத் தொடுத்திருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ், விக்னேஸ்வரன், சரவணன் ஆகிய மூன்று தரப்புகளும் அந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்வரை, தயாளனுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைக்கோரி நீதிமன்றத்தில் ஒரு சார்பு (ex parte) வழக்குமனு ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட வாதிகள் இருவரும் சமர்ப்பித்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமட் பின் பாச்சே இன்று விசாரித்தார். விசாரணையின் முடிவில் விக்னேஸ்வரன், சரவணன் இருவருக்கும் ஆதரவாக இடைக்காலத் தடையுத்தரவை வழங்கினார்.

#TamilSchoolmychoice

தயாளர் ஸ்ரீபாலன் என்ற நபர் அவதூறு வழக்கு முடிவடையும்வரை சமூக ஊடகங்களில் வாதிகளுக்கு எதிரான அவதூறான அறிக்கைகளையும், காணொலி உரைகளையும் பகிர முடியாது என இன்று வழங்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையுத்தரவு தெரிவித்தது.

இதுவரையில் இரண்டு முறை பிரதிவாதியான தயாளன் என்ற நபர் தனது காணொலி (வீடியோ) மூலம் வாதிகள் இருவர் மீதும் அவதூறான கருத்துகளைப் பரப்பியிருந்தார். 16 செப்டம்பர் 2020 தேதியிட்ட முதல் காணொலியில் தயாளன் மஇகா கட்சியையும், அதன் தலைவர் விக்னேஸ்வரனையும் அவதூறாகப் பேசியிருந்தார்.

25 நவம்பர் 2020 தேதியிட்ட இரண்டாவது காணொலியில் தயாளன், மஇகாவையும் டத்தோஸ்ரீ சரவணனையும் அவதூறாகப் பேசியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையை அடுத்து 6 ஜனவரி 2021-ஆம் நாளுக்கு நிர்ணயித்த நீதிமன்றம் அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது இரண்டு தரப்புகளும் நேரடியாக விசாரணையில் பங்கு பெற உத்தரவிட்டது.