இலண்டன் : அடுத்து வரும் ஆண்டுகளில் குறிப்பாக 2028-இல் சீனா உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக உருவெடுத்து அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது இரண்டாவது இடத்தில் சீனா இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது.
ஆனால் 2030-ஆம் ஆண்டில் இந்தியா முன்னேறி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சியடையும் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்காவது இடத்திற்கு ஜப்பான் தள்ளப்படும்.
தற்போது 4-வது இடத்தைப் பிடித்திருக்கும் ஜெர்மனி அதைத் தொடர்ந்து 2030-இல் உலகின் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்திற்குப் பின்தள்ளப்படும்.
இன்றைய நிலையில் உலக அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக பிரிட்டன் திகழ்கிறது. ஆனால் 2024 முதற்கொண்டு பிரிட்டன் 6-வது இடத்திற்கு கீழ் நோக்கி இறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியமும் தனிப்பட்ட ஒரு பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும். 2020-ஆம் ஆண்டில் 19 விழுக்காடு உற்பத்தியை உலக அளவில் வழங்கியது. ஆனால் எதிர்வரும் 2035-இல் இந்த விழுக்காடு 12% ஆகக் குறையும். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியிருப்பது இதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.