கோலாலம்பூர் : சரவாக் பிகேஆர் கட்சியின் தலைவராக இருந்த ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி சிங் மீண்டும் அதே பதவியில் இடைக்காலத்திற்கு தொடர்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.
பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் நீண்ட நேரம் மனம் விட்டு பேச்சு வார்த்தைகள் நடத்தியதன் பலனாக லேரி சிங் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
எதிர்வரும் 2021 மே மாதத்திற்குள் சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற வேண்டிய நிலையில் சரவாக் மாநிலத்தில் செயல்படும் பிகேஆர் கட்சியின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சரவாக்கின் பொருத்தமான டாயாக் இன தலைவர்கள், சரவாக் பிகேஆர் சுதந்திரமாக செயல்பட வேண்டியதன் அவசியம், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹாராப்பான்) கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளுடான உடன்பாடு போன்ற அம்சங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன எனவும் லேரி சிங் தெரிவித்தார்.
சரவாக் பிகேஆர் ஒரு டாயாக் இனத்தலைவரால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் பதவி விலகுவதாக ஏற்கனவே லேரி சிங் தெரிவித்திருந்தார்.
பாரு பியான் பிகேஆர் கட்சியிலிருந்து விலகிய பின்னர் அந்தப் பொறுப்புக்கு லேரி சிங் நியமிக்கப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22) சரவாக் பிகேஆர் தலைவர் பதவியிலிருந்து லேரி சிங் விலகினார். சமூக ஊடகங்கள் மூலம் லேரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
“ஆழ்ந்த பரிசீலனைகளுக்குப் பிறகு, பிகேஆர் சரவாக்கின் நலன்களுக்காக, சரவாக் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் இந்த கட்சியை டாயாக் தலைவர்கள் வழிநடத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். சரவாக் மக்கள் தொகையில் உள்ள டாயாக்களில் பெரும்பான்மையானவர்கள், 43 விழுக்காடு மக்களைக் கொண்டிருக்கின்றனர். மலாய்க்காரர்களும் சீனர்களும் 24 விழுக்காட்டினர் மட்டுமே. இருப்பினும், சரவாக்கில் மிகவும் வறிய மற்றும் பின்தங்கிய பகுதிகளில் டாயாக் மக்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று லேரி தனது பதவி விலகலுக்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
பதவி விலகுவதாகக் கூறிய லேரி சிங் எடுத்த முடிவை சரவாக் பிகேஆர் மாநில தலைமை மன்றம் ஏகமனதாக நிராகரித்தது.
அடுத்த கட்சி தேர்தல் வரை மாநில தலைமை மன்றம் லாரிக்கு முழு ஆதரவையும் அளிக்கும் என்று சரவாக் பிகேஆர் தகவல் தலைவர் அபுன் சூய் அனிட் அவசரக் கூட்டத்தை நடத்திய பின்னர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியதன் பலனாக லேரி சிங் சரவாக் பிகேஆர் கட்சியின் தலைவராக இடைக்காலத்திற்கு தொடர்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.
2001- ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் சரவாக் டாயாக் கட்சியின் (பிபிடிபி) கீழ் லேரி முதன்முதலில் போட்டியிட்டார்.