Home One Line P1 இந்தோனிசிய தேசிய கீதத்தை மாற்றி அமைத்த காணொலி விசாரிக்கப்படுகிறது

இந்தோனிசிய தேசிய கீதத்தை மாற்றி அமைத்த காணொலி விசாரிக்கப்படுகிறது

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தோனிசிய நாட்டின் தேசிய கீத பாடல் வரிகளை மாற்றியமைத்த காணொலியை புக்கிட் அமான் விசாரித்து வருகிறது. இது அக்குடியரசின் கோபத்தை மூட்டும் செயலாகக் கருதப்படுகிறது.

காவல் துறையின் குற்றவியல் சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) இந்த வழக்கை விசாரித்து வருவதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

“நாங்கள் தேசத்துரோக சட்டம் 1948- இன் பிரிவு 4 (1) (பி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் பிரிவு 233 (1) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கிறோம். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் திங்கட்கிழமை (டிசம்பர் 28) தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மலேசியாவிற்கும் இந்தோனிசியாவிற்கும் இடையிலான உறவுகளை பாதிக்கக்கூடிய இந்த காணொலியை ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் கடுமையாக கண்டித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு (டிசம்பர் 27) வெளியிடப்பட்ட அறிக்கையில், மலேசியரால் பதிவேற்றியதாகக் கூறப்படும் இந்த காணொலியை மலேசிய அதிகாரிகள் விசாரிப்பதை தூதரகம் உறுதிப்படுத்தியது.

மை ஆசியான் யூடியூப் பக்கத்தின் கருத்துப் பிரிவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட இந்த காணொலியில், இந்தோனிசிய தேசிய கீதத்தின் பாடல் வரிகள் மாற்றப்பட்டு, குடியரசை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.