கோலாலம்பூர்: அம்னோ போராட்டத்தில் தாம் இன்னமும் இணைந்திருப்பதாக துங்கு ரசாலி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கட்சியுடன் இருப்பார் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், அப்போது முதல் இப்போது வரை, அவர் ஒருபோதும் அம்னோவை விட்டு வெளியேறும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.
“நான் ஏன் அம்னோவை விட்டு வெளியேற வேண்டும்? நான் அம்னோவுடன் நன்கு ஒருங்கிணைந்திருக்கிறேன். அதனால்தான் நான் எப்போதும் அம்னோவுடனே இருக்கிறேன்,” என்று அவர் கட்சியை விட்டு விலகுவதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்டபோது கூறினார்.
செமாங்காட் 46 கட்சியை உருவாக்க அம்னோவை விட்டு வெளியேறியதாக குற்றம் சாட்டிய சில தரப்பினரின் கருத்து போலல்லாமல், 1988- ஆம் ஆண்டில் அம்னோ நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பின்னர், அக்கட்சி உருவாக்கப்பட்டது என்ரு துங்கு ரசாலி கூறினார்.
மறுபுறம், டாக்டர் மகாதீர் உருவாக்கிய புதிய அம்னோவில் சேர அவரும் சில அம்னோ உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளப்படாததால், முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் முன்மொழிவின் பேரில் செமாங்காட் 46 கட்சி நிறுவப்பட்டது என்று அவர் கூறினார்.
“ஆனால், டாக்டர் மகாதீர் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, அவர் உருவாக்கிய அம்னோவுக்குத் திரும்பும்படி, அனைவரையும் அழைத்தபோது, நாங்கள் செமாங்காட் 46 கட்சியை கலைக்க தயாராக இருந்தோம். ஏனென்றால், ஒரே குழுவிலிருந்து பிரிந்து செல்லும் எண்ணம் எங்களுக்கு இல்லை,” என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
பெர்சாத்து மற்றும் பாஸ் உடனான அம்னோவின் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று துங்கு ரசாலி முன்னர் கடுமையாக அழைப்பை விடுத்திருந்தார். மேலும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க அனுமதிக்குமாறு மக்களவைத் தலைவரை வலியுறுத்தி ஒரு கடிதமும் அனுப்பியிருந்தார்.