புது டில்லி: 2018-ஆம் ஆண்டு ஜனவரி 15- ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கே .சிவனின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 14- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் பதவிக்காலத்தை அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் இஸ்ரோ விஞ்ஞானியாக 1982- ஆம் ஆண்டு இணைந்தார்.
இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றியுள்ளார். 2022 ஜனவரி 14- ஆம் தேதி வரை சிவன் பதவியில் தொடர்வார் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவரின் பதவிக் காலத்தில், சந்திரயான் 2 விண்கலம் திட்டம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
நிலாவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 செயற்கைகோள் கடந்தாண்டு ஜூலை 22-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. புறப்பட்ட 16-வது நிமிடத்தில் ஏழுகலனிலிருந்து விண்கலம் பிரிந்து புவியை குறைந்த பட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 45, 475 கிலோ மீட்டர் தொலைவிலும் நீள் வட்டப் பாதையில் சுற்றியது.
இதன் பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை சந்திரயானின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த ஜூலை 30-ஆம் தேதி மூன்றாவது முறையாக சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
இதையடுத்து 71, 792 கிலோ மீட்டர் நீள் வட்டப்பாதையில் சந்திரயான் செயற்கைகோள் புவியை சுற்றியது. செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திரயான் நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனுடான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு வாரக் கணக்கில் நாசா உட்பட பிற விண்வெளி ஆய்வு மையங்கள் சந்திராயன் 2 -இன் நிலை குறித்து ஆய்வு நடத்தின.
அதில், சந்திராயன் 2 தரை இறங்கும் போது, விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, அடுத்தாண்டு மீண்டும் சந்திராயன் 3 விண்னில் பாய்ச்சப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.