கோலாலம்பூர் : மலேசியாவின் பிரபல இணைய ஊடகம் மலேசியாகினி. ஆண்டுதோறும் மலேசியாவில் செய்திகளில் மிக அதிகமாக இடம் பெற்ற பிரபலம்
யார் என்பதை வாசகர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி தேர்ந்தெடுப்பது அந்த ஊடகத்தின் வழக்கம்.
அந்த வகையில் 2020-ஆம் ஆண்டில் அதிகமாக செய்திகளில் இடம்பெற்ற பிரபலத்தை மலேசியாகினி இணைய ஊடகம் தேர்ந்தெடுத்திருக்கிறது.
அவர் யார் தெரியுமா?
கொரொனா தொற்றுக் காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி சேவையாற்றிய மருத்துவர்களையும் அதிகாரிகளையும் அவர்களைப் போன்ற முன் களப்பணியாளர்களையும் நாட்டில் மிக அதிகமாக செய்திகளில் இடம் பெற்று பிரபலமானவராக மலேசியாகினி தேர்ந்தெடுத்துள்ளது.
மலேசியாகினியின் அந்த வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் சுகாதாரஅமைச்சின் சுகாதார இலாகாவின் தலைமை இயக்குனரான டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம்.
மூன்றாவது இடத்தை பிரதமர் மொகிதின் யாசினும் நான்காவது இடத்தை நஜிப் துன் ரசாக்கும், ஐந்தாவது இடத்தை சபாவில் மரக்கிளையில் அமர்ந்து இணையத் தொடர்புக்கு சிரமப்பட்ட விவோனா என்ற இளம் பெண்ணும் பிடித்துள்ளனர்.
இந்த வரிசையில் துன் மகாதீருக்கு ஆறாவது இடம் கிடைத்திருக்கிறது. மாமன்னருக்கு ஏழாவது இடமும் அன்வார் இப்ராகிமுக்கு 8-வது இடமும் இந்த வரிசையில் கிடைத்திருக்கிறது.