கோலாலம்பூர்: மக்களின் விருப்பத்தை தேசிய கூட்டணி அரசாங்கம் கேட்க மறுத்ததால், பொதுத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு மற்றும் அரசாங்க நிறுவனங்களிலிருந்து வெளியேறுமாறு அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டதாக வட்டாரம் கூறியுள்ளது.
புத்ரா உலக வணிக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழம (ஜனவரி 5), அம்னோ தொகுதி தலைவர்களுடனான சந்திப்பில் சாஹிட் இதனை தெரிவித்ததாக பெயர் கூற மறுத்த சிலாங்கூர் தொகுதித் தலைவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில், அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தத்தை விரும்பும் மக்களின் விருப்பத்தை தேசிய கூட்டணி அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறியதால் அம்னோவுக்கு வேறு வழியில்லை என்று சாஹிட் கூறியதாக அவர் கூறியுள்ளார்.
ஆயினும், இந்த செய்தியை தேசிய முன்னணி தகவல் தொடர்பு பிரிவு மறுத்துள்ளது. இது குறித்து அம்னோ தலைமையகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக அது ஒரு டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இன்றைய சந்திப்புக் கூட்டத்தில், தேசிய முன்னணி பொதுச் செயலாளராக இருந்த கெதெரெ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அனுவார் மூசாவை, அப்பதவியிலிருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அனுவார் மூசாவுக்கு பதிலாக அப்பதவியில் அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அனுவார் மூசா பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணிக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கட்சி மற்றும் அதன் தலைவர்களை விமர்சித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.