கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து பாஸ் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஜனவரி 31- ஆம் தேதி அம்னோ பொதுக் கூட்டத்தில் மட்டுமே முடிவு செய்யப்படும் என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.
“இந்த விவகாரம் பின்னர் அம்னோ பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்பதால், இது பிரதிநிதிகளால் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்பதைப் பார்க்க காத்திருக்க வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் சுருக்கமாக கூறினார்.
எவ்வாறாயினும், இந்நேரத்தில் கட்சியின் பரிசீலனைகள் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கவில்லை.
கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தலைமையில், நேற்று இரவு நடந்த அம்னோ உச்சமன்றக் குழுக் கூட்டம், ஜனவரி 31- ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ பொதுக் கூட்டத்தில் பெர்சாத்துவுடனான கட்சியின் நெருக்கடி உறவு தொடர்பான பிரச்சனையை கொண்டு வர முடிவு செய்தது.
191 கட்சி தொகுதிகளில் 189 தொகுதிகள் சமர்ப்பித்த தீர்மானத்தை பரிசீலித்த பின்னர் உச்சமன்றக் குழு இந்த முடிவை எடுத்ததாக அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டான் தெரிவித்தார்.