கலிபோர்னியா: டுவிட்டர் நிறுவனம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கணக்கை நிரந்தமாக நிறுத்துவதாகக் கூறியது.
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களால் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, வன்முறைக்கு மேலும் தூண்டக்கூடிய ஆபத்து இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியது.
“@realDonaldTrump கணக்கு மற்றும் அவர் பதிவிட்ட பதிவுகளை உற்று நோக்கினால், வன்முறையைத் தூண்டும், ஆபத்து காரணமாக கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளோம்,” என்று நிறுவனம் ஒரு டுவீட்டில் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், பேஸ்புக் டிரம்ப்பின் கணக்கை அவர் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை நிறுத்தி வைப்பதாகக் கூறியது.
குடியரசுக் கட்சித் தலைவரான டிரம்ப், ஜனவரி 20- ஆம் தேதி ஜனநாயகக் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜோ பைடனுக்கு அதிகாரத்தை ஒப்படைக்க உள்ளார்.
அந்நாளில் வெளியிடப்பட்ட டிரம்ப்பின் இரண்டு கருத்துக்கள் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகளை மீறியதாக டுவிட்டர் வெள்ளிக்கிழமை ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகம் மீதான தாக்குதலுக்குப் பின்னர், புதன்கிழமை 88 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட டிரம்ப்பின் கணக்கை டுவிட்டர் முன்பு தற்காலிகமாகத் தடுத்தது. மேலும், கொள்கைகளை தொடர்ந்து மீறினால் கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதாக எச்சரித்தது.
டிரம்ப் தனது கணக்கு தடுக்கப்படுவதற்கு முன்னர் டுவிட்டர் கொள்கையை மீறிய மூன்று கருத்துக்களை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.