கோலாலம்பூர்: ஜனவரி 21 தொடங்கி 11.06 மில்லியன் பெறுநர்களுக்கு, 2.38 பில்லியன் ரிங்கிட் பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்2.0) நிதி உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 11- ஆம் தேதி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
இன்று ஓர் அறிக்கையில், பிபிஎன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://bpn.hasil.gov.my- இல் ஜனவரி 15 முதல் விண்ணப்பத்தை சரிப்பார்க்க முடியும் என்று அவர் கூறினார்.
“பி40 மற்றும் எம்40 பெறுநர்களுக்கான கொடுப்பனவுகள் முறையே ஜனவரி 21 மற்றும் ஜனவரி 25 முதல் தங்கள் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படும். வங்கி கணக்கு இல்லாத பெறுநர்களுக்கு, பணம் செலுத்தும் தேதி ஜனவரி 25-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேங்க் சிம்பானான் நேஷனல் (பிஎஸ்என்) கிளைகளில் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.