கோலாலம்பூர்: அவசரகால பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கையை பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஒத்மான் சைட் நிராகரித்தார்.
முன்னதாக, அவசரகால பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கையை ஆதரிக்குமாறு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.
மக்களவை துணைத் தலைவராக, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உறுதியளிக்கும் பணியில் தாம் இருப்பதாக அசலினா கூறினார்.
“மாமன்னர் சமீபத்தில் அறிவித்த கட்டளைச் சட்டத்தின் 14 (1) பிரிவு, மாமன்னர் பொருத்தமானது என்று நினைத்ததால் மட்டுமே நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என்பதை வலியுறுத்த வேண்டும். எனவே, மாமன்னர் எதிர்காலத்தில் ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தை அழைப்பது அல்லது பிரகடனம் மற்றும் கட்டளைகளை இரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது என் கருத்து. மேலே கூறப்பட்ட காரணங்களுக்காக, ஜனவரி 18, அன்று ஒரு கடிதம் மூலம் பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியபடி இந்த விவகாரத்தில் ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை நான் நிராகரிக்கிறேன், உடன்படவில்லை,” என்று அம்னோ பொதுச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் கூறினார்.