கோலாலம்பூர்: பலரால் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள மாநிலங்களின் உணவகங்களுக்கான செயல்பாட்டு நேரத்தை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா இது குறித்து டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சகம் தற்போது இரவு 10 மணி வரை உணவகங்கள் செயல்பட அனுமதிப்பதன் நன்மை தீமைகளை மதிப்பீடு செய்து வருவதாக அவர் கூறினார்.
“எந்தவொரு தகவல்களும் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவிப்பார்,” என்று அவர் கூறினார்.
தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையின் கீழ் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.
முன்னதாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக உணவகங்களின் இயக்க நேரங்களை நீட்டிக்க முடியுமா அல்லது வேறுவழிகள் குறித்து அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறியிருந்தார்.
இரவு 8 மணி வரை கால அவகாசம் தொழிலாலர்களுக்கு குறிப்பாக இரவு உணவு கிடைப்பது கடினமாக இருப்பதாக பலர் குறைக் கூறிவருகின்றனர்.
கொவிட் -19 தொற்றின் தினசரி சம்பவங்களையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.
“நாங்கள் சிலரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்றோம். அனைத்து வணிக வளாகங்களும் இரவு 8 மணிக்கு மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் 10 மணிக்கு (இரவு) மூடப்பட்டால், இரவு 10 மணி வரை வேறொரு கடைகளைத் திறக்க வேண்டியது அவசியமா? என்று பேசி வருகிறோம். தற்போதைய தொற்று சம்பவங்கள் 3,000 க்கும் அதிகமாக உள்ளது. இதுவும் கடினம், எனவே சுகாதார அமைச்சு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தட்டும்,” என்று அவர் மலேசியாகினிக்கு தெரிவித்தார்.