வாஷிங்டன் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 20) அமெரிக்க பாரம்பரியத்தின்படியும், கோலாகலமாகவும், அதே வேளையில் பல்வேறு பாதுகாப்புகள், கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் நிகழ்ந்த அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
46-வது அதிபராக ஜோ பைடனும் அவரின் துணையதிபராக கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
பதவியேற்கும் முன்பு வாஷிங்டனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட வழிபாட்டில் ஜோ பைடன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அமெரிக்க வரலாற்றில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது கத்தோலிக்க அதிபர் ஜோ பைடன் ஆவார். இதற்கு முன்னர் முதலாவது கத்தோலிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜோன் எஃப் கென்னடி ஆவார்.
127 ஆண்டுகள் பழமை வாய்ந்த தனது குடும்ப பைபிளின் மீது சத்தியப் பிரமாணம் செய்து ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார்.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி டொனால்ட் டிரம்ப்
பதவி விலகிச் செல்லும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காமல், மரியாதை சந்திப்பு நிகழ்த்தாமல் சென்று விட்டாலும், டிரம்பின் துணை அதிபராகப் பதவி வகித்த மைக் பென்ஸ் பைடனின் பதவியேற்பில் கலந்து கொண்டார்.
முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், அவரது துணைவியார் ஹிலாரி கிளிண்டன், ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் துணையதிபர் டேன் குவேய்லும் பதவியேற்பு சடங்குகளில் கலந்து கொண்டார்.
பிரபல பாடகிகள் லேடி காகா, ஜெனிபர் லோப்பஸ் ஆகியோர் பதவியேற்பு சடங்கில் பாடல்களைப் படைத்தனர். அமெரிக்காவின் தேசிய கீதத்தை லேடி காகா பாடினார்.
அதன் பின்னர் கமலா ஹாரிஸ் பதவியேற்றவுடன் பாடப்பட்ட ‘திஸ் லேண்ட்’ என்ற அமெரிக்க நாட்டுப் பற்றைப் பாடலை ஜெனிபர் லோப்பஸ் பாடினார்.
புளோரிடா மாநிலம் சென்ற டொனால்ட் டிரம்ப்
வழக்கமாக அதிகாரப் பரிமாற்றத்தின்போது பதவி விலகிச் செல்லும் அதிபர் மரியாதை நிமித்தம் புதிய அதிபரைச் சந்தித்து அவருடன் தேநீர் அருந்தி விட்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவார்.
ஆனால், டிரம்ப், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கவில்லை எனத் தொடர்ந்து கூறி வருகிறார். அதைத் தொடர்ந்து ஜோ பைடனைச் சந்திக்காமல், அவரைப் புறக்கணித்து விட்டு வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் புறப்பட்டு புளோரிடா மாநிலம் நோக்கி செல்கிறார்.
அமெரிக்க வரலாற்றில் இதுபோன்று ஓர் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபரைச் சந்திக்காமல் செல்வது இதற்கு முன் 1861-ஆம் ஆண்டில்தான் நிகழ்ந்திருக்கிறது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
நேற்று காலை அமெரிக்க நேரப்படி 8 மணியளவில் மேரின் 1 (Marine 1) என்ற பெயர் கொண்ட, அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் வெள்ளை மாளிகையின் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கியது.
இந்த ஹெலிகாப்டர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்த டொனால்ட் டிரம்ப்பையும் அவரது மனைவி மெலானியா டிரம்பையும் ஏற்றிக் கொண்டு பறந்தது.
வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் தம்பதியரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட மேரின் 1 ஹெலிகாப்டர் ஜோயிண்ட் பேஸ் அண்ட்ரூஸ் இராணுவ விமாளத் தளத்தை சென்றடைந்தது.
அங்கு ஏர் போர்ஸ் 1 விமானத்தின் மூலம் டிரம்ப் புளோரிடா மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். புறப்படுவதற்கு முன்னர் ஜோயிண்ட் பேஸ் அண்ட்ரூஸ் இராணுவ விமாளத் தளத்தில் டிரம்ப் பத்திரிகையாளர்களிடமும் தனது ஆதரவாளர்களிடையேயும் பிரியாவிடை உரையாற்றினார்.
அந்த உரையில் ஜோ பைடன் குறித்து ஒரு வார்த்தை கூட டிரம்ப் பேசவில்லை.
அதன் பின்னர் டிரம்ப் தம்பதியர் ஏர் போர்ஸ் 1 விமானத்தில் ஏற, அவர்களை ஏற்றிக் கொண்டு புளோரிடா மாநிலத்தின் மியாமி நகர் நோக்கி அந்த விமானம் பறந்தது.
பதவி விலகும் இறுதி நாளில் டிரம்ப தனக்கிருக்கும் அதிகாரத்திற்கேற்ப 143 சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, அவர்களுக்கான தண்டனையைக் குறைப்பது ஆகிய ஆவணங்களில் கையெழுத்திட்டார்.