கோலாலம்பூர்: ஐ- சினார் விண்ணப்பத்தை எளிமைப்படுத்த அம்னோ இளைஞர் பிரிவு ஊழியர் சேமநிதி வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக பிரிவு 2 விண்ணப்பதாரர்களுக்கு அது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஈபிஎப் எதிர்நோக்கும் தொழில்நுட்ப சிக்கல்களால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று அதன் இளைஞர் தலைவர் டாக்டர் அசிராப் வாஜ்டி டுசுகி கூறினார்.
“அம்னோ இளைஞர் பிரிவு மீண்டும் ஐ-சினார் விண்ணப்பத்தை இலகுவாக்க ஈபிஎப்-ஐ கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக பிரிவு 2 -இன் அனைத்து நிபந்தனைகளையும் இரத்து செய்வதன் மூலம் மக்கள் தங்கள் சேமிப்பை உடனடியாக திரும்பப் பெற முடியும்,” என்று அவர் தனது முகநூல் ஒரு பதிவில் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று நள்ளிரவில் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் ஓர் அறிக்கையில் , ஐ-சினார் வசதி தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஈபிஎப் தெரிவித்தது.
ஐ-சினார் பிரிவு 2 விண்ணப்பங்களில் பெரும்பாலானவை நேற்று தொடங்கி மறுஆய்வு செய்த பின்னர், அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியானது.