Home One Line P2 டிரம்ப் தலை தப்பியது – செனட் மன்றத் தீர்மானம் தோல்வி

டிரம்ப் தலை தப்பியது – செனட் மன்றத் தீர்மானம் தோல்வி

801
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்க வரலாற்றில் ஒரே வருடத்தில் இரண்டு முறை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

எனினும் அவர் மீதான இரண்டாவது நீதி விசாரணை கோரும் தீர்மானம் நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 13)  செனட் மன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது.

அவர் சார்ந்த குடியரசுக் கட்சியினர் அவரை மீண்டும் காப்பாற்றியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த ஜனவரி 6-ஆம் தேதி டிரம்பின் அதிபர் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களைத் தூண்டிவிட்டதற்காக டிரம்ப் மீது நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் மன்றத்தில் இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் வெற்றியடைந்திருந்தால், அவர் மீதான இம்பீச்மெண்ட் (impeachment) எனப்படும் அவர் குற்றம் இழைத்திருக்கிறார் எனப் பொருள்படும் நீதி விசாரணை நடத்தப்பட்டிருக்கும்.

இதே போன்றதொரு விசாரணை தீர்மானத்தை செனட் மன்றத்தில் அவர் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி எதிர்நோக்கினார். அந்தத் தீர்மானத்தையும் எதிர்த்த குடியரசுக் கட்சியினர் அதனைத் தோற்கடித்தனர்.

நேற்றைய இரண்டாவது தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால் டிரம்ப் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பார்.

அமெரிக்க அதிபராக ஒருவர் தலா 4 ஆண்டுகள் கொண்ட இரண்டு தவணைக் காலத்திற்குப் பதவி வகிக்க முடியும். டிரம்ப் ஒரு தவணையை மட்டும் நிறைவு செய்திருப்பதால், இன்னொரு முறை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது.

எதிர்வரும் 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என 74 வயதான டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

நேற்றைய செனட் மன்ற விசாரணையில் அவர் தலை தப்பித்ததைத் தொடர்ந்து அடுத்த அதிபர் தேர்தலில் தனது 78-வது வயதில் மீண்டும் ஒருமுறை மோதிப் பார்க்கும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார்.

செனட் மன்றத்தில் நீதிவிசாரணையை முறியடிப்பதில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், அவர் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் தனிநபர் என்ற அடிப்படையில் கொண்டுவரப்படலாம் என்ற சாத்தியத்தையும் ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் மன்றத்தில் சரிபாதி 50 பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 7 பேர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து டிரம்புக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து டிரம்ப் மீது நீதிவிசாரணை தேவை என 57 வாக்குகளும் தேவையில்லை என 43 வாக்குகளும் கிடைத்தன.

எனினும் இதுபோன்ற இம்பீச்மெண்ட் – நீதி விசாரணைகளுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பதால் அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது.