சென்னை : கடந்த சில நாட்களாக திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் நிலவி வந்த இழுபறி நிலை இன்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இன்று திங்கட்கிழமை (மார்ச் 8) இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாட்டின்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில் வேல்முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகுதியில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்.
மேலும் ஆதித் தமிழர் பேரவை என்ற சிறிய கட்சி ஒன்றுக்கு, ஒரு சட்டமன்றத் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
நேற்று கையெழுத்தான மற்றொரு உடன்பாட்டின்படி காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே, இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அங்கு வசந்தகுமார் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலும் நடத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக – காங்கிரஸ் நேரடியாக மோதுகின்றன. பாஜக வேட்பாளராக ஏற்கனவே பொன்.இராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.