சென்னை : பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக மீண்டும் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் சார்பில் முன்னாள் இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இன்று சனிக்கிழமை (மார்ச் 6) இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி அதிமுக-பாஜக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி மீண்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.
2014 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்.இராதாகிருஷ்ணன்.
ஆனால் 2019 பொதுத் தேர்தலில் வசந்தகுமாரிடம் அவர் தோல்வியடைந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றிருந்த வசந்தகுமார் கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்.
தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் முன்னணி வணிக நிறுவனமான வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளராகவும் வசந்தகுமார் திகழ்ந்தார். மின்சாரத் தளவாடப் பொருட்களை விற்பனை செய்யும் பல பேரங்காடிகளை இந்நிறுவனம் தமிழகம் எங்கும் கொண்டுள்ளது.
பழம்பெரும் காங்கிரஸ் தலைவரும் சிறந்த மேடைத்தமிழ் பேச்சாளருமான குமரி அனந்தனின் இளைய சகோதரர்தான் வசந்த குமார்.
இதற்கிடையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் வசந்த் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சென்னை-28 படத்திலும் அதன் இரண்டாம் பாகத்திலும் விஜய் வசந்த் நடித்திருந்தார்.