கோலாலம்பூர்: மக்களவையில் பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவசரகால பிரகடனத்தை நாடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை போலி செய்திகள் தொடர்பான அவசர கட்டளை கீழ் வருவதாக பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு குற்றம், என்னைப் பொறுத்தவரை இது ஒரு குற்றம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தகவல் தொடர்பு மற்றும்பல்லூடக அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுடனான ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பெரும்பான்மையை இழந்ததால் அரசாங்கம் அவசரகால அறிவிப்பைப் பெற்றுள்ளது என்ற பல தரப்பினரின் குற்றச்சாட்டை தவறான செய்தியாகக் கருத முடியுமா என்று கேட்டபோது தக்கியுடின் இதனைக் கூறினார்.
கொவிட் -19 பாதிப்பு மற்றும் அவசரகால நிலை பிரகடனம் தொடர்பான தவறான செய்திகளை கட்டுப்படுத்துவதே இந்த கட்டளை. மீறினால், 100,000 ரிங்கிட்டுக்கு மேல் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
ஜனவரி 12-ஆம் தேதி, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா பிரதமர் முஹைதீன் யாசின் ஆலோசனையின் பேரில் அவசரகால நிலையை அறிவித்தார்.
மாமன்னர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் அவசரகால நிலையை அறிவித்ததாகவும், அது இறுதியானது மற்றும் நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது என்று அமைச்சர் கூறினார்.
இந்த கட்டளைச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்னர், தவறான செய்திகளைப் பரப்புவதன் நோக்கம் முதலில் நிரூபிக்கப்பட வேண்டும் என்று தக்கியுடின் வலியுறுத்தினார்.