கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரிங்கிட் அபராதத்தை அமல்படுத்தப்படுவதை மீண்டும் அரசு மாற்றி உள்ளது.
முகக்கவசங்களை முறையற்ற முறையில் அணிவது உட்பட, மற்ற அனைத்து குற்றங்களுக்கும் தனிநபர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதம் மற்றும் நிறுவனங்களுக்கு 50,000 ரிங்கிட் அபராதம் விதித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த மாற்றம் வந்துள்ளது.
புதிய விதிகளின்படி தனிநபர்களுக்கு அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் அபராதம் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகின்றன.
அவசர கட்டளைச் சட்டத்தின் 342 (தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (திருத்தம் 2021) இன் கீழ் மூன்று வகை குற்றங்களின் அடிப்படையில் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
முதல் முறை குற்றவாளிகளுக்கு – முகக்கவசங்களை சரியாக அணியாதது போன்றவற்றுக்கு – 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இரவு விடுதிகளில் இருப்போருக்கு அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.
குற்றவாளிகள் முன்கூட்டியே அபராதம் செலுத்தினால் 50 முதல் 25 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
எட்டு முதல் 14 நாட்களுக்குள் செலுத்தினால், 25 விழுக்காடு தள்ளுபடியும், ஏழு நாட்களுக்குள் செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.
மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், பி40, நாட்பட்ட நோய் உள்ளவர்களுக்கு அபராதங்களளை குறைக்க முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்படும்.