Home One Line P2 இந்தியாவின் தேசிய விருதுகள் : “விஸ்வாசம்” படத்திற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது

இந்தியாவின் தேசிய விருதுகள் : “விஸ்வாசம்” படத்திற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது

703
0
SHARE
Ad

புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.அந்த விருதுகளின் பட்டியலில் சிறந்த இசையமைப்பாளர் விருது டி.இமானுக்குக் கிடைத்திருக்கிறது.

அஜீத் குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “விஸ்வாசம்” படத்தில் சிறந்த இசையமைப்பை வழங்கியதற்காக டி.இமானுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அந்தப் படத்தில் இடம் பெற்ற “கண்ணான கண்ணே” என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து பிரபலமானது. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை தான் வடிவமைத்த அழகான வரிகளால், உருக்கமான பாடலாக உருவாக்கியிருந்தார் கவிஞர் தாமரை.

#TamilSchoolmychoice

அந்தப் பாடலை சித் ஸ்ரீராம் தனது இனிய குரலால் சிறப்பாகவும், உருக்கமாகவும் பாடியிருந்தார். இந்த அம்சங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அற்புதமான இசையமைப்பை வழங்கியிருந்தார் டி.இமான்.

இவர்கள் அத்தனை பேரின் கூட்டு முயற்சிக்கும் உழைப்புக்கும் தேசிய விருது என்ற மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது

அந்த விருதுகளில் சூப்பர் டீலக்ஸ் தமிழ்ப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.

பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், நடிப்பு ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சிறிய கதாபாத்திரங்களிலும், ஏன் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் பல சிறிய கதைகளை உள்ளடக்கியத் திரைப்படமாக வித்தியாசமான முறையில் உருவாக்கியிருந்தார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. பரவலான வரவேற்பையும் விமர்சனங்களையும் இந்தத் திரைப்படம் பெற்றது.

அந்தப் படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அவரின் வித்தியாசமான முயற்சிக்கும் உழைப்புக்கும் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்திருக்கிறது.

சிறந்த தமிழ்ப் படமாக “அசுரன்” தேர்வு

அதன்படி சிறந்த தமிழ்ப்படமாக “அசுரன்” தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

பூமணி என்ற தமிழ் எழுத்தாளரின் “வெக்கை” என்ற நாவலை அற்புதமான திரைப்பட அனுபவமாக உருமாற்றியிருந்தார் வெற்றி மாறன். அவரின் உழைப்புக்கும், அதற்கேற்ப ஒத்துழைத்து தனது நடிப்பில் மெருகேற்றியிருந்த தனுஷின் பங்களிப்புக்கும் உரிய மரியாதைகள் இந்த விருதுகள் மூலம் கிடைத்திருக்கின்றன.

பொதுவாக தேசிய விருதுகளைப் பெறும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதில்லை என்ற சூழலும் எப்போதும் நிலவி வருகிறது. ஆனால் அசுரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. 1000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வசூலை அசுரன் உலக அளவில் வசூலித்தது.

அசுரன் படத்திற்காக தனுஷூக்கு சிறந்த நடிகர் விருது

அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கிய தனுஷ் தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். ஏற்கனவே, ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றவர் தனுஷ்.

ஆடுகளம், அசுரன் இரண்டு படங்களையும் இயக்குநர் வெற்றிமாறனே இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகருக்கான விருது மனோஜ் பாஜ்பாயி என்ற இந்தி நடிகருக்கும் வழங்கப்படுகிறது. “போன்ஸ்லே” என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது.

ஆக, 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதுகள் இரண்டு நடிகர்களுக்கு இந்த முறை வழங்கப்படுகிறது.