கோலாலம்பூர்: அண்மையில் அம்னோ பொதுப் பேரவையில் அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவை அல்லது அரசு பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை என்று கட்சியின் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்தில் நீடிக்கும் என்று அவர் கூறினார்.
“உண்மையில், அம்னோ பொதுப் பேரவையின் போது அமைச்சர்கள், மந்திரி பெசார், துணை அமைச்சர்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் (ஜி.எல்.சி) தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு உத்தரவிட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
“பொதுப் பேரவையில், நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உச்சமன்றக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும், ” என்று தற்காப்பு அமைச்சரான அவர் கூறினார்.
மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக அனைத்து அம்னோ அமைச்சர்களும் அமைச்சரவையில் நீடிப்பதாக பிரதமர் மொகிதின் யாசின் நேற்று அறிவித்திருந்தார்.