Home நாடு அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவுகள் என்ன?

அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவுகள் என்ன?

540
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) பிற்பகலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அம்னோ உச்ச மன்றத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படப் போகிறது என்பது குறித்த பரபரப்பாக ஆரூடங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன.

ஆளும் தேசியக் கூட்டணிக்கு ஆதரவில்லை என அம்னோ பொதுப் பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் 15-வது பொதுத் தேர்தல் வரை தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் அம்னோ தொடர்ந்து இடம் பெற்றிருக்கும்.

அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள் என முன்னாள் பிரதமர் நஜிப், துங்கு ரசாலி ஹம்சா போன்ற தலைவர்கள் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

ஆனால், அம்னோ அமைச்சர்களோ, தங்களின் அமைச்சர் பதவிகளை விட்டு விலகாமல் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அம்னோ பிளவுபடும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது.

ஒருசாரார் தேசியக் கூட்டணியோடு இணைந்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு சாரார் தனித்து அம்னோ-தேசிய முன்னணியாக இயங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அம்னோ தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா?

இதற்கிடையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அம்னோ கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், அம்னோ தேர்தல்கள் நடத்தப்பட்டால் கட்சி பிளவுபடும், எனவே 18 மாதங்கள் வரை ஒத்தி வைக்க வேண்டும் என நஜிப் துன் ரசாக் போன்றவர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால் அமைச்சராக இருக்கின்ற கைரி ஜமாலுடின் போன்றவர்கள் 2018 பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சித் தேர்தலை ஒத்தி வைத்தோம் – எனினும் அப்போதும் பொதுத் தேர்தலில் தோல்வி கண்டோம் – என காட்டமாக நஜிப்புக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

உடனடியாக அம்னோ தேர்தல்கள் நடத்தப்பட்டு புதிய தலைமைத்துவம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – அவர்களே கட்சியின் அடுத்த கட்ட இலக்கையும், பயணத்தையும் நிர்ணயிக்க வேண்டும் என கைரி ஜமாலுடின் கூறுகிறார்.

இன்றைய அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் இதுகுறித்த இறுதி முடிவும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியே கட்சித் தேர்தல்களை ஒத்தி வைக்கும் முடிவை அம்னோ எடுத்தாலும் அதற்கான ஒப்புதலை சங்கங்களின் பதிவதிகாரி அலுவலகம் வழங்க வேண்டும்.

பெர்லிஸ் அம்னோ மாநிலத் தலைவர் ஷாஹிடான் காசிம்மை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலக்கும் முடிவையும் சாஹிட் ஹாமிடி அதிரடியாக எடுத்துள்ளார்.

இதன் தொடர்பிலும் இன்றைய அம்னோ கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்