கோலாலம்பூர் : தமிழகத்தில் மிக மோசமான நிலையில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து, “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கிறார்.
தனது முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றின் மூலம் உலகத் தமிழர்களுக்கு விடுத்த செய்தியில் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
“மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி என இருமுனைகளில் தமிழ்நாடு அரசாங்கம் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கிறது. இந்த இக்கட்டான நெருக்கடியைச் சமாளிக்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தேன். அதன்படி பலர் முன்வந்து நன்கொடைகளை வழங்கிவருகிறார்கள். தமிழ்நாட்டுக்கு இந்த நெருக்கடி காலகட்டத்தில் கைகொடுக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும், அமைப்புகளும் குறிப்பாக அமெரிக்க அமைப்புகள் நிதி வழங்க முன்வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை மறக்காத அவர்களின் நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதே போன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் தமிழ்நாட்டுக்கு உதவ நிதியளிக்க கேட்டுக் கொள்கிறேன்” என அந்தக் காணொலியின் வழி ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஸ்டாலின் வேண்டுகோளைத் தொடர்ந்து மஇகா சார்பிலும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும் ஒரு கணிசமான தொகை தமிழ் நாடு அரசின் முதலமைச்சர் நிவாணநிதிக்கு வழங்கப்படும் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கூட்டாக அறிவித்திருக்கின்றனர்.
“நமது தொப்புள் கொடி உறவுகள் கொண்ட தமிழ்நாடு நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் மலேசியத் தமிழர்கள் தங்களின் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஒற்றுமையுடன் இணைந்து, தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டினருக்கும் கைகொடுக்க வேண்டியதும், மனிதாபிமான அடிப்படையில் நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டியதும் நமது கடமை” என்றும் விக்னேஸ்வரனும், சரவணனும் தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
“அதே வேளையில் மலேசியத் தமிழர்களின் கூட்டு முயற்சியாக இந்த மக்கள்நல உதவித் திட்டம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்பட விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரனும், சரவணனும், இதன் தொடர்பில் தமிழ் நாடு கொவிட்-19 நிவாரணங்களுக்காக நிதி உதவி அளிக்க விரும்பும் தனி நபர்களும், அமைப்புகளும் மஇகா தலைமையகத்தையோ, அல்லது தங்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.