Home நாடு தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்: 62 ஆண்டு கால வெற்றிப் பயணம் – மதுரை நாடாளுமன்ற...

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்: 62 ஆண்டு கால வெற்றிப் பயணம் – மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பாராட்டு

2540
0
SHARE
Ad

(மலேசியாவின் முன்னணி கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் உதயமான நாள் மே 14. அதனை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது)

கோலாலம்பூர்: நாட்டின் மிகப் பெரிய கூட்டுறவு இயக்கங்களில் ஒன்றான தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் இன்று மே 14-ஆம் நாள் 62-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.

நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலன் கருதி 1960 மே திங்கள் 14-ஆம் நாளில் அன்றைய மஇகா தேசியத் தலைவர் அமரர் துன் வீ.தி.சம்பந்தனால் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சங்கம்.

இந்தக் கூட்டுறவு சங்கத்திற்கு பல ஆண்டுகாலமாக தலைமையேற்று  டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் திறம்பட நடத்தி வருவது ஒரு சிறப்பாகும்.  மன்னருக்கேற்ற மதியுரைஞரைப் போலவும் படைத்தலைவருக்கு ஏற்ற தலைமைத் தளபதியைப் போலவும் கூட்டுறவு சங்கத்திற்கு வாய்த்த நிர்வாக தலைமை இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் கூட்டுறவுச் சங்கத்தின் அடுத்தச் சிறப்பு.

பா.சகாதேவன்
#TamilSchoolmychoice

இதன் முதல் தலைவராக துன் வீ.தி.சம்பந்தனும் துணைத் தலைவராக டான்ஸ்ரீ ப.மாணிக்கவாசகமும் செயலாளராக கோவிந்தசாமியும் பொறுப்பு ஏற்றிருந்த தருணத்தில் முதன் முதலாக கெடா மாநிலத்தில் உள்ள புக்கிட் சீடிம் தோட்டத்தை வாங்கியபோதே அதற்கு அடித்தளமாக விளங்கியவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம்.

தனது 62 கால பயணத்தில் பல சவால்களையும், இடர்களையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் சிறந்த நிருவாகத் திறன், உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு ஆகிய காரணங்களால் வெற்றிகரமாகக் கடந்து, தற்பொழுது நாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகளுக்கே முன்மாதிரியாக இவ்வமைப்பு திகழ்கின்றது.

ஒரு கூட்டுறவு சங்கம் என்ற அடிப்படையில் தன்னுடைய உறுப்பினர்களுக்கு ஏராளமான சமூக நலச் சலுகையுடன் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி அனுகூலத்தையும் அள்ளி வழங்குவதுடன், இந்த நாட்டில் தமிழ் வளர்ச்சியையும் தமிழ் எழுத்தாளர்களின் ஊக்குவிப்பையும் இலக்காகக் கொண்டு கடந்த 31 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் போட்டியையும் தொய்வின்றி நடத்தி வருகிறது இச்சங்கம்.

பன்னாட்டு புக்ககப் பரிசுப் போட்டி

அத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாக ஈராண்டுகளுக்கு ஒரு முறை, பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசு அளிக்கப்படுகிறது.

தமிழ் இலக்கியப் போட்டியைப் பொறுத்தமட்டில், உலக அளவில் இதுதான் அதிகமான பரிசுத் தொகையைக் கொண்டது. கொரோனா தாக்கத்தினால் சுகாதார பாதிப்பும் பயணத் தடையும் ஏற்பட்டுள்ள இந்தக் காலக்கட்டத்திலும் 5-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இணையத்தின் ஊடாக நடத்தப்பட்டு அதற்கான பரிசுத் தொகையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது.

பன்னாட்டுப் புத்தகப் பரிசுப் போட்டியில் தொடர்ந்து வெளிநாடுவாழ் தமிழர்கள் வெற்றிபெறும் சூழல் எழலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு எழுத்தாளர்களும் பயனடையும் வண்ணம், பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியுடன் மலேசியப் புத்தகப் பரிசுப் போட்டியையும் இணைத்து இந்த அறவாரியம் நடத்துகிறது. இரு போட்டிகளிலும் மலேசிய எழுத்தாளர்கள் பங்கு கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இலக்கிய சேவையைப் போல மலேசிய இந்தியர்களின் கலை-இசைத் துறை வளரவும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை பண்பாட்டு வாரியத்தின் மூலம் நாட்டிய, நாடக, இசைக் கலை வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது இந்தச் சங்கம்.

அத்துடன் ஆன்மிக சேவையையும் கூட்டுறவு சங்கம் ஆற்றி வருகிறது. தன்னுடைய நிர்வாகத்தின்கீழ் உள்ள தோட்டங்களில் ஆலயங்கள் உருவாக்கப்பட்டு, அந்தந்தத் தோட்டங்களில் வாழும் பாட்டாளுக்கான ஆன்மிகப் பணியை கூட்டுறவு சங்கம் ஆற்றி வருகிறது. அண்மையில்கூட கோல பேராக் தோட்டத்தில் சங்கம் எழுப்பியுள்ள அருள்மிகு இராமர் ஆலயத்தில் மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாவற்றையும்விட குறிப்பிடத்தக்கது, பன்னாட்டு பெருமைமிக்க கல்வி கலாசாலையான ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்கும் பணிக்காக, மொழி-இலக்கிய அறவாரியத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது. இந்த செய்தியறிந்து, வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் அறிஞர் பெருமக்களும் சங்கத்தைப் பெருமளவில் பாராட்டினர்.

இவ்வாறு கல்வி, இலக்கியம், கலை, ஆன்மிகம் என்றெல்லாம் பல முனைகளில் கடமையாற்றிவரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், இந்த நாட்டில் முதன் முறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடைமைத் திட்டத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு சங்கம் முதன் முதலில் வாங்கிய புக்கிட் சீடிம் தோட்டத்தில் தன் சொந்த பாட்டாளிகளின் நலனை கருத்திற் கொண்டு மலிவான விலையில் நடைமுறைப்படுத்திய இந்த வீட்டுடமைத் திட்டம்தான் நாட்டில் உருவான முதல் வீட்டுடைமைத் திட்டமாகும். அரசாங்கத்திற்கே முன்மாதிரியாகப் பார்க்கப்பட்டது இந்த வீட்டுடைத் திட்டம்.

61 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கத்தினர்களைக் கொண்டுள்ள கூட்டுறவு சங்கம், தான் அடையும் உபரி இலாபத்தை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிப்பதை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.

துன் வீ.தி.சம்பந்தன் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடிவரும் கூட்டுறவு சங்கம், அதை கல்வி மறுமலர்ச்சிக்கு உரிய விழாவாக அனுசரித்து வருகிறது. அதன் அடிப்படையில், மலேசியக் கல்விச் சான்றிதழ்(எஸ்பிஎம்), மலேசிய உயர்க் கல்விச் சான்றிதழ் (எஸ்டிபிஎம்) தேர்வுகளில் சிறந்த அடைவு நிலையுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதியுடன் தங்கப் பதக்கமும் வழங்கி சிறப்பித்து வருகிறது.

ஒரு கூட்டுறவு சங்கம் தன்னையும் செம்மையாக நிலைநிறுத்திக் கொண்டு, இப்படி யெல்லாம் இலக்கியப் பணி, கல்விப் பணி, கலை வளர்ச்சி, சமூகப் பணி என்று செயல்பட முடிகிறது என்றால், அதற்கெல்லாம் இந்த சங்கத்திற்கு வாய்த்த தகுதிசால் தலைமைதான் காரணம் என்பதில் கடுகளவும் மிகையில்லை.

இந்த நாட்டின் மையப் பகுதியான கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெறும் பெரும்பாலான இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் மிகக் குறைந்த விலை அல்லது இலவசமாக துன் சம்பந்தன் மாளிகையில் அமைந்துள்ள டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமா அரங்கத்தை வழங்கி, நிகழ்ச்சிப் படைப்பாளர்களுக்கு உற்றுழி உதவி வருவது கூட்டுறவு சங்கத்தின் இன்னொரு சிறப்பு.

இவற்றுக்கும் மேலாக, ஆயிரக் கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை அளித்துவரும் இந்தச் சங்கம் இந்தியர்களுக்கான ஒரு வேலை வாய்ப்பு மையமாகவும் விளங்குகிறது.

இந்த நாட்டில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட உயரமான ஒரேக் கட்டடத்தைக் கொண்டிருப்பதுடன் இந்திய சமுதாயத்தின் பெருமையைப் பறைசாற்றுவதும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்தான்.

தொழில்முனைவர்களுக்கு அவர்களின் தகுதி, அடமான சொத்து ஆகியவற்றின் அடிப்படையில் 5 ஆயிரம் முதல் 5 இலட்ச வெள்ளி வரை 6 சதவீத வட்டியுடன் கடன் வசதியும் வழங்கப்படுகிறது.

அதைப்போல தன் உறுப்பினர்கள் வீட்டுடைமையாளராக விளங்க வேண்டும் என்னும் பரந்த நோக்கில், முதல் முறையாக வீடு வாங்க முனைவோருக்கு 4.55 சதவிகித வட்டியுடன் தகுதிக்கேற்ப 3 இலட்ச வெள்ளிவரை கடன் வசதியும் அளிக்கப்படுகிறது. உறுப்பினர்களின் பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்கு ஆளானால், அவர்களின் கல்விச் செலவிற்காக 18 வயது வரை மாதந்தோறும் 1,000 வெள்ளி அளவிற்கு கூட்டுறவு சங்கம் வழங்குகிறது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் பாராட்டு

சு.வெங்கடேசன்

இன்னும் ஏராளமான பெருமைக்கும் சிறப்பிற்கும் உரிய கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டில் நடத்திய பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியில் பரிசு வென்றவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் இலக்கியப் படைப்பாளியும் கவிஞருமான சு.வெங்கடேசன். அவர் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் இலக்கியப் பணியை வெகுவாக பாராட்டினார்.

தமிழ் இலக்கிய படைப்புகளை உலக அளவில் எடுத்துச் செல்வது ஒரு பெரும்பணி. அந்த வகையில், கோலாலம்பூரில் உள்ள கூட்டுறவு சங்கம் ஆண்டுதோறும் இலக்கிய விழாவையும் ஈராண்டுகளுக்கு ஒருமுறை உலக புத்தகப் பரிசுப் போட்டியையும் நடத்தி வருவது, உலகத் தமிழர்களுக்கு ஆற்றும் உன்னதப் பணி என்று வெங்கடேசன் மேலும் தெரிவித்தார். இன்று கூட்டுறவு சங்கம் 62-ஆவது ஆண்டை எட்டுவதன் தொடர்பில் அவர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.

இவர், இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.