கோலாலம்பூர்: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதமர் மொகிதின் யாசின் 40 பில்லியன் ரிங்கிட் பொருளாதார உதவி நிதியை அறிவித்துள்ளார்.
பெமெர்காசா பிளஸ் திட்டத்தில் மத்திய அரசிடமிருந்து 5 பில்லியன் ரிங்கிட் நேரடி நிதியும் இதில் அடங்கும் என்று அவர் நேற்று கூறினார்.
பொது சுகாதாரத் திறனை அதிகரித்தல், மக்கள் நலனைப் பாதுகாத்தல் மற்றும் வணிகங்களின் நீடித்த தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை பெமெர்காசா பிளஸ் முக்கிய அம்சமாகக் கொண்டுள்ளது.
2,500 ரிங்கிட்டுக்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் 500 ரிங்கிட்டைப் பெறும் என்றும், 2,501 முதல் 5,000 ரிங்கிட் வரை சம்பாதிக்கும் குடும்பங்கள் 300 ரிங்கிட்டைப் பெறும் என்று பிரதமர் கூறினார்.
திருமணமாகாதவர்களுக்கு, ஜூன் மாத இறுதியில், 100 ரிங்கிட் வழங்கப்படும்.
இது தவிர, தேசிய வங்கி உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, வங்கிக் கடன் தள்ளுபடிகளை வழங்குவதற்கான முழு உத்தரவாதத்தையும் அது அளித்ததாக பிரதமர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்படாத பி40 குழு மற்றும் வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உதவி பெறலாம் என்று பிரதமர் கூறினார்.
மூன்று மாதங்களுக்கு இந்த தள்ளுபடி செயல்படுத்தப்படும், அல்லது ஆறு மாத காலப்பகுதியில், மாதத் தவணையில் 50 விழுக்காடு திருப்பிச் செலுத்தவும் முடியும் என்று மொகிதின் கூறினார்.