Home நாடு மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் ஜூன் 16-இல் கூடுகிறது! அவசர கால சட்டம் நீக்கமா?

மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் ஜூன் 16-இல் கூடுகிறது! அவசர கால சட்டம் நீக்கமா?

472
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்து வரும் சில நாட்களில் மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுல்லா அரசியல் கட்சித் தலைவர்களை தனியாகவோ, குழுக்களாகவோ சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலைவுகிறது. சிங்கப்பூரின் ஸ்ட்ரெயிட்ஸ் பத்திரிகை உள்ளிட்ட பல ஊடகங்கள் இந்த ஆரூடங்களைத் தெரிவித்திருக்கின்றன.

அவசரகால சட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு முடிவடையவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மாமன்னர் சந்திக்கவிருக்கிறார். அவர்களின் கருத்துகளைக் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி மாமன்னர் தலைமையில் மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரபூர்வ சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அன்று மதிய விருந்துபசரிப்புக்குப் பின்னர் மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

அதற்கு முன்பாக அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் சந்திப்பார். அவர்களின் கருத்துகளையும், அவசர கால சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னர் அந்தக் கருத்துகளை மலாய் ஆட்சியாளர்களின் பார்வைக்கு மாமன்னர் கொண்டு செல்வார்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு அவசர கால சட்டம் நிறைவையும்போது அது நீட்டிக்கப்படுமா இல்லையா என்ற முடிவு மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தில் நிர்ணயிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில், அம்னோ தேசியக் கூட்டணிக்கானத் தங்களின் ஆதரவை ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு மீட்டுக் கொள்வோம் என்றும் அறிவித்திருக்கும் நிலையில், அண்மையக் காலமாக ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்களை பல தரப்புகள் வெளியிட்டு வருகின்றன.